கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா ஆஸ்பத்திரி அமைக்கப்படும்: பசவராஜ் பொம்மை

கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா ஆஸ்பத்திரி அமைக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா ஆஸ்பத்திரி அமைக்கப்படும்: பசவராஜ் பொம்மை
Published on

தேசிய மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (நிமான்ஸ்) மருத்துவமனையில் நேற்று உலக மனநல சுகாதார தின விழா நடைபெற்றது.

மத்திய மந்திரி

இதேபோல் பெங்களூரு கலாசிபாளையா பகுதியில் உள்ள விக்டோரியா அரசு ஆஸ்பத்திரியில் வயிறு கோளாறுகள் குறித்த அறிவியல் நிறுவனம், உடல் உறுப்புகள் தானம் செய்வதற்கான உயர் பன்னோக்கு ஆஸ்பத்திரி கட்டிடம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நடைபெற்றது. மேலும் பெங்களூரு ராஜீவ்காந்தி நெஞ்சக ஆஸ்பத்திரியில் புதிதாக அமைக்கப்பட்ட கொரோனா ஆஸ்பத்திரியின் தொடக்க விழா நடந்தது. மேற்கண்ட 3 விழாக்களிலும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மான்டவியா கலந்து கொண்டார். முதலில் நிமான்ஸ் ஆஸ்பத்திரியில் உலக சுகாதார தின விழாவை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:-

நமது மனநில பிரச்சினைகளுக்கு தீர்வு காண நமது பாரம்பரிய முறைகளை புரிந்து கொள்ள வேண்டும். மனநல சுகாதாரத்தை பேணி காக்கும் நோக்கத்தில் இந்திய பாரம்பரியம் குறித்த அம்சங்களை மருத்துவ பாடத்திட்டத்தில் சேர்க்கலாம். அதுகுறித்து நான் ஆலோசிக்கிறேன். இதுகுறித்து நிமான்ஸ் மருத்துவமனை ஆழமாக ஆய்வு நடத்தி தீர்வு காண வேண்டும். இதன் மூலம் அரசு கொள்கையை வகுத்து செயல்படுத்த முடியும்.

பிரார்த்தனைகள்

நமது திருவிழாக்கள், பண்டிகைகள் அனைத்தும் மனநல சிகிச்சையின் ஒரு அங்கம் ஆகும். சமூக, மத விழாக்களில் ஒன்று கூடுவது, காலை, மாலை நேரங்களில் பிரார்த்தனைகள் செய்வது போன்றவை நமது மனநல சுகாதாரத்துடன் தொடர்பு உடையவை.

இந்த பாரம்பரியங்கள் மனநல பிரச்சினைகளை தீர்க்க பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒரு கல்வி நிறுவனத்தின் பங்கு மிக முக்கியமானது. இது தொடர்பாக வெறும் புத்தகங்களை படித்து தேர்ச்சி பெறுவதை காட்டிலும், நிமான்ஸ் நிறுவனம் தனது மாணவர்களை ஆராய்ச்சியில் ஈடுபடுத்த வேண்டும்.

ஆராய்ச்சியாளர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்களிடம் நாடு மிகுந்த எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. இவை தான் நாட்டின் எதிர்கால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. பிரதமர் மோடி ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். உங்களின் பணி நாட்டை மையப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இவ்வாறு மன்சுக் மாண்டவியா பேசினார்.

புதிய கட்டிடம் திறப்பு

இதைத்தொடர்ந்து விக்டோரியா ஆஸ்பத்திரியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை மத்திய மந்திரி மன்சுக் மான்டவியா திறந்து வைத்தார். இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:-

சிறுநீரகம், இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக ஏராளமான நோயாளிகள் வரிசையில் காத்திருக்கிறார்கள். அத்தகையவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் உறுப்பு பொருத்தும் சிகிச்சை கிடைக்க வேண்டும். உடல் உறுப்புகள் பொருத்தப்படும் பணி வணிக மயமானால், ஏழை நோயாளிகள் பாதிக்கப்படுவதுடன் அவர்களின் உயிரும் பறிபோகும் அபாயம் உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு டாக்டர்கள் மனிதநேயத்தின் அடிப்படையில் பணியாற்ற வேண்டும். 200 நோயாளிகள் கல்லீரல் தானத்திற்காக காத்திருக்கிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.20 லட்சம் வரை செலவாகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு இலவசமாக உடல் உறுப்புகள் வழங்கப்படுகின்றன. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் செலவாகும். இங்கு உலக தரத்தில் அறுவை சிகிச்சை வசதிகள் உள்ளன. நோயாளிகள் தைரியமாக அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

2 கோடி பேருக்கு தடுப்பூசி

இதன்பின்னர் ராஜீவ்காந்தி நெஞ்சக ஆஸ்பத்திரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா ஆஸ்பத்திரியை மத்திய மந்திரி மன்சுக் மான்டவியா தொடங்கி வைத்து பேசுகையில், கர்நாடகத்தில் 83 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 15-ந் தேதி நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 2 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது. இதில் கர்நாடகம் அதிகளவில் தடுப்பூசிகளை போட்டது. இது பாராட்டுக்குரியது என்று கூறினார்.

இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசும்போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா ஆஸ்பத்திரி அமைக்கப்படும். இதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். இங்கு அமைக்கப்பட்டுள்ள கொரோனா ஆஸ்பத்திரி கட்டமைப்பு பணிகளுக்கு தனியார் நிறுவனங்கள் உதவி புரிந்துள்ளன. பிறந்த உடனேயே யாரும் பெரியவர் ஆகுவதில்லை. நமது பெற்றோர், ஆசிரியர்கள், நமது சமுதாயம் போன்றவை நமது வளர்ச்சிக்கு ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பு வழங்குகிறார்கள். நாம் வளர்வது மட்டுமின்றி அக்கம்பக்கத்தினரையும் வளர்க்க வேண்டும். நமது வளர்ச்சிக்கு உதவிய சமுதாயத்திற்கு சிறிதேனும் திரும்ப வழங்க வேண்டும். அப்போது தான் நமது வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைக்கும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

விழாவில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com