

திருவனந்தபுரம்,
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல நாடுகளில் தொழில்கள் முடங்கின. இதனால் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வேலை பார்த்த பிற நாட்டினர் தங்களுடைய சொந்த நாடுகளுக்கு திரும்பினர்.
இதுபற்றி கேரள மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த ஆண்டு மே மாதம் முதல், இந்த ஆண்டு மே மாதம் வரையிலான காலங்களில், கேரளாவில் இருந்து 27 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு பயணித்துள்ளனர்.
இதில் 14,63,176 பேர், மீண்டும் கேரளாவுக்கு திரும்பி உள்ளனர். இவர்களில், 10 லட்சத்து 45 ஆயிரத்து 288 பேர் (70%க்கு கூடுதலானோர்) வெளிநாடுகளில் தங்கள் வேலைகளை இழந்ததால் மீண்டும் திரும்பி உள்ளனர்.
இதுதவிர, 2.90 லட்சம் பேர், விசா காலாவதி போன்ற இதர காரணங்களால் நாடு திரும்பி உள்ளனர். கேரளாவுக்கு திரும்பிய 14.63 லட்சம் பேரில், 96% பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, கத்தார், ஓமன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து திரும்பி வந்தவர்கள். ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து மட்டும் 8.67 லட்சம் பேர் திரும்பி வந்துள்ளனர் என தெரிவித்து உள்ளது.