

ஆமதாபாத்,
குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் பயின்று வரும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோரிடம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர் ஒருவர் உள்பட 40 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இதேபோன்று, காந்திநகரில் உள்ள இந்திய தொழில்நுட்ப மையத்தின் 25 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி ஐ.ஐ.எம்.ஏ. அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, பலர் அறிகுறியற்ற நிலையில் காணப்பட்டனர். அவர்கள் குணமடைந்து வருகின்றனர்.
கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு கடந்த ஆண்டில் இருந்து அனைத்து கல்வி சார்ந்த நடவடிக்கைகளும் ஆன்லைன் வழியே நடந்து வருகின்றன. ஐ.ஐ.டி. வளாகத்திற்குள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. வளாகத்திற்குள் வசிக்கும் அனைவருக்கும் முன்னெச்சரிக்கை வழிகாட்டி நெறிமுறைகளை அவ்வப்பொழுது பகிர்ந்து வருகிறோம் என கூறியுள்ளார்.