கொரோனா பாதிப்பு: டெல்லி சுகாதார மந்திரி உடல்நிலையில் முன்னேற்றம்; பொது வார்டுக்கு நாளை மாற்றம்

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்திர ஜெயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு பொது வார்டுக்கு நாளை மாற்றப்படுகிறார்.
கொரோனா பாதிப்பு: டெல்லி சுகாதார மந்திரி உடல்நிலையில் முன்னேற்றம்; பொது வார்டுக்கு நாளை மாற்றம்
Published on

புதுடெல்லி,

டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் அதிக காய்ச்சல் மற்றும் சுவாச கோளாறு ஏற்பட்டது. இதனால் அவர் ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கடந்த 16ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூட்டிய கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கலந்து கொண்டார். டெல்லி முதல் அமைச்சர் கெஜ்ரிவால் ஏற்கனவே கொரோனா பரிசோதனையை மேற்கொண்டார். இதில், கெஜ்ரிவாலுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்தது.

இந்நிலையில், டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு நடந்த கொரோனா பரிசோதனையில் அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதியானது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கடந்த 19ந்தேதி அவருக்கு நுரையீரல் பாதிப்பு தீவிரமடைந்தது. இதனையடுத்து, அவருக்கு பிராணவாயு செலுத்தப்பட்டு வருகிறது என சுகாதார மந்திரியின் அலுவலகம் தெரிவித்தது. இந்நிலையில், அவர் சாகேத் மேக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

அவருக்கு அளிக்கப்பட்ட பிளாஸ்மா தெரபி சிகிச்சையை தொடர்ந்து உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது. இதுபற்றி டெல்லி சுகாதார மந்திரியின் அலுவலக அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, அவருக்கு காய்ச்சல் குறைந்துள்ளது. பிராணவாயு அளவு அதிகரித்து உள்ளது. அவரை பொது வார்டுக்கு நாளை கொண்டு சென்று விடலாம் என டாக்டர்கள் கூறியுள்ளனர் என்று தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com