

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலையை வீழ்த்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஊரடங்கு பொதுமுடக்கம் போடப்பட்டுள்ள நிலையில் தொற்று பாதிப்பு தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வருகிறது. 4 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு ஒருநாளில் தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது 2 லட்சத்துக்கும் சற்று அதிகமாக தொற்றுபாதிப்பு நிலவி வருகிறது.
நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 298 பேருக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களையும் சேர்த்து இதுவரை நமது நாட்டில் 2 கோடியே 73 லட்சத்து 69 ஆயிரத்து 93 பேர் கொரோனாவின் பிடியில் சிக்கி உள்ளனர்.
நேற்று முன்தினம் 21 லட்சத்து 57 ஆயிரத்து 857 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில்தான் தொற்று பாதிப்பு 2 லட்சத்து 11 ஆயிரத்து 298 ஆக பதிவாகி இருக்கிறது.
கொரோனாவால் ஏற்படுகிற உயிர்ப்பலி நேற்று முன்தினம் 4,157 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலையில் நேற்று இது மீண்டும் 4 ஆயிரத்துக்கு கீழே வந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 847 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிர்ப்பலி எண்ணிக்கை 3 லட்சத்து 15 ஆயிரத்து 235 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா உயிர்ப்பலி விகிதம் 1.15 சதவீதமாக நீடிக்கிறது.
நேற்று அதிகபட்சமாக மராட்டியத்தில் 992 பேரும், கர்நாடகத்தில் 530 பேரும் உயிரிழந்து இருக்கிறார்கள்.
இருப்பினும் தத்ராநகர்ஹவேலி டாமன் டையுவும், லட்சத்தீவும், மிசோரமும் கொரோனாவால் ஏற்படுகிற உயிரிழப்பில் இருந்து நேற்று தப்பி இருப்பதை மத்திய சுகாதார அமைச்சக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
நேற்று தொடர்ந்து 14-வது நாளாக தொற்று பாதிப்பின் அளவை விட, அதிலிருந்து மீட்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 83 ஆயிரத்து 135 பேர் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து குணம் அடைந்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடுகளுக்கு திரும்பி இருக்கிறார்கள்.
இந்தியாவில் இதுவரையில் குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 46 லட்சத்து 33 ஆயிரத்து 951 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அதிகபட்ச எண்ணிக்கையாக, கர்நாடகத்தில் 40 ஆயிரத்து 738 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 90.01 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து நாட்டில் கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று இந்த எண்ணிக்கை 75 ஆயிரத்து 684 குறைந்தது. மொத்தம் 24 லட்சத்து 19 ஆயிரத்து 907 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர்.
இது மொத்த பாதிப்பில் 8.84 சதவீதம்தான் என்ற தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
கர்நாடகத்தில் அதிகபட்சமாக 4 லட்சத்து 9 ஆயிரத்து 945 பேர் சிகிச்சையில் உள்ளனர். மராட்டியத்தில் 3 லட்சத்து 17 ஆயிரத்து 733 பேரும், கேரளாவில் 2 லட்சத்து 48 ஆயிரத்து 910 பேரும் சிகிச்சையில் இருக்கிறார்கள்.