தமிழ்நாட்டில் இருந்து பெங்களூரு வருபவர்களுக்கு கொரோனா ‘‘நெகட்டிவ்’’ சான்றிதழ் கட்டாயம் இல்லை

தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருவுக்கு வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என்று பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா கூறினார்.
தமிழ்நாட்டில் இருந்து பெங்களூரு வருபவர்களுக்கு கொரோனா ‘‘நெகட்டிவ்’’ சான்றிதழ் கட்டாயம் இல்லை
Published on

பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ்குப்தா பெங்களூருவில் நேற்று, விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். அங்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூருவில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் நகரில் கொரோனா தடுப்பூசி போடும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள், மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் தடுப்பூசி மையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக மார்ஷல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் கூடுதலாக ஊர்க்காவல் படையினரும் நியமிக்கப்படுகிறார்கள். இதற்கு போலீஸ் துறையின் ஒப்புதலை பெற்றுள்ளோம். அரசின் வழிகாட்டுதல்படி மராட்டியம், கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து பெங்களூருவுக்கு வருபவர்கள் கொரானா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் காட்ட வேண்டும்.

தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது. பெங்களூரு மாநகராட்சியில் 8 மண்டலங்களிலும் தலா ஒரு தற்காலிக மருத்துவமனை அமைக்கப்படும். அங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். 200 படுக்கைகள் கொண்ட தனியார் மருத்துவமனைகளில் 20 சதவீத படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. விரைவில் அந்த மருத்துவமனை நிர்வாகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

இவ்வாறு கவுரவ்குப்தா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com