கொரோனா பரவலை தடுக்க எதற்கும் தடை தேவை இல்லை; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி

கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க எதற்கும் தடை விதிக்க தேவை இல்லை என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க எதற்கும் தடை தேவை இல்லை; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி
Published on

உப்பள்ளி:

கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க எதற்கும் தடை விதிக்க தேவை இல்லை என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஆக்சிஜன் டேங்கர்கள்

கர்நாடகத்தில் புதிய வகை கொரோனா பரவினால் அதை எதிர்கொள்ள நாங்கள் தயார் நிலையில் உள்ளோம். மாநிலத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 60 படுக்கைகள் வரை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் 200 செயற்கை சுவாச கருவிகள் (வென்டிலேட்டர்) உள்ளன. மேலும் அங்கு மருத்துவ நிபுணர்கள், டாக்டர்கள், ஊழியர்கள் உள்ளனர்.

தேவையான மருந்து வகைகளும் போதிய அளவில் கையிருப்பு உள்ளது. 2 ஆக்சிஜன் டேங்கர்கள் உள்ளன. கொரோனா முதல் மற்றும் 2-வது அலையின்போது இந்த கிம்ஸ் ஆஸ்பத்திரி சிறப்பாக செயல்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது. அரசு கடுமையான விதிமுறைகளை உருவாக்குவதற்கு பதிலாக, பொதுமக்கள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய மனநிலையை ஏற்படுத்தி கொள்ள வேண்டியது அவசியம்.

25 லட்சம் டோஸ்

மக்களை காப்பாற்ற அரசு உறுதி பூண்டுள்ளது. கொரோனாவுக்கு எதிராக போராட மக்களும் உறுதியாக இருக்க வேண்டும். கொரோனா பரவி அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை தயாராக உள்ளது. சுகாதாரத்துறையில் கடந்த 2 ஆண்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவல் அதிகமானால் புதிய ஊழியர்களும் நியமிக்கப்படுவார்கள். ஆனால் அவர்களை பணிநிரந்தரம் செய்ய விதிமுறைகளில் இடம் இல்லை. கொரோனா பரவலை தடுக்க எந்த விஷயத்திற்கும் தடை விதிக்க தேவை இல்லை. அதே நேரத்தில் முககவசம் அணிவது, பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்வது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது போன்ற விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பொருளாதார நடவடிக்கைகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க மாட்டோம். கர்நாடகத்தில் தற்போது 8 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளது. மேலும் 25 லட்சம் டோஸ் கொள்முதல் செய்யப்படும்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com