கொரோனா உயர்வு; தடுப்பூசி தொடங்கியதும் வழிமுறைகளை மக்கள் மறந்தனர்: எய்ம்ஸ் இயக்குனர் பேட்டி

தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியதும் கொரோனா வழிமுறைகளை மக்கள் மறந்தது தொற்று உயர காரணம் என டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் பேட்டியளித்து உள்ளார்.
கொரோனா உயர்வு; தடுப்பூசி தொடங்கியதும் வழிமுறைகளை மக்கள் மறந்தனர்: எய்ம்ஸ் இயக்குனர் பேட்டி
Published on

புதுடெல்லி,

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை எதிர்கொள்ள, முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல், கைச்சுத்தம் பராமரித்தல் ஆகிய 3 செயல்களும் கவசமாக கொரோனாவிடம் இருந்து நம்மை பாதுகாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 3 நாட்களாக நாள்தோறும் 2 லட்சத்திற்கும் கூடுதலான கொரோனா பாதிப்புகளை நாடு சந்தித்து வருகிறது. கடந்த 10 நாட்களில் நாட்டில் கொரோனா பாதிப்பு 10 லட்சம் எண்ணிக்கையை கடந்து சென்று விட்டது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,34,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,45,26,609 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,341 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,75,649 ஆக உயர்ந்துள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை பற்றி டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறும்பொழுது, பாதிப்பு எண்ணிக்கை உயர்வுக்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால், மிக முக்கிய 2 காரணங்கள் என்னவெனில், ஜனவரி மற்றும் பிப்ரவரியில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியதும் பாதிப்புகள் சரிவடைந்தன.

பொதுமக்கள் கொரோனா தடுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் நிறுத்தி விட்டனர். இந்த தருணத்தில், வைரசானது திரிபடைந்து உருமாற்றம் பெற்று விட்டது. மிக விரைவாக பரவி வருகிறது என கூறியுள்ளார்.

இந்நேரத்தில் நிறைய மதம் சார்ந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தேர்தல்கள் நடந்து வருகின்றன. வாழ்க்கையும் முக்கியம் என நாம் புரிந்து கொள்ள வேண்டும். கட்டுக்கோப்புடன் அதனை நாம் மேற்கொள்ள வேண்டும்.

அதனால் மத உணர்வுகள் புண்படாமல் நடந்து கொள்ள முடியும். கொரோனா தடுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் முடியும் என்று கூறியுள்ளார். சுகாதார கட்டமைப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் கடந்த காலத்தில் செய்தவற்றை நாம் மீண்டும் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என்றும் குலேரியா கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com