

மும்பை,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பிவண்டி காமத்கரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் அதிகளவில் சிகிச்சை பலனின்றி உயிர் இழப்பது தெரியவந்தது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த ஆஸ்பத்திரியில் தேவையான டாக்டர்கள் இல்லை என்பதும், அந்த ஆஸ்பத்திரி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் இந்திய மருத்துவ கவுன்சிலின் நெறிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பிவண்டி நிஜாம்பூர் மாநகராட்சி அந்த ஆஸ்பத்தியின் கொரோனா சிகிச்சை உரிமத்தை ரத்து செய்து உள்ளது.
இனிமேல் அந்த ஆஸ்பத்திரி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாது. மேலும் தற்போது அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் பிவண்டியில் உள்ள இந்திராகாந்தி நினைவு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட உள்ளனர்.
சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரி கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க உாமம் அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் நிதின் மொகஷி தெரிவித்தார்.