

புதுடெல்லி,
கொரோனா பாதிப்புகளை தடுக்க இந்தியாவில் அவசரகால தேவைக்காக தடுப்பூசிகளை பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதன்படி, கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் நாட்டில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
உள்நாட்டில் உற்பத்தியான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகியவை இதற்கு அனுமதி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு முதற்கட்ட அடிப்படையில் தடுப்பூசிகள் போடப்பட்டன.
இதன்பின்னர் கடந்த மார்ச் 1ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதில், 100 வயது கடந்தவர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தியில் வருகிற மே 1ந்தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என அறிவித்து உள்ளது.
இதன்படி தனியார் மருத்துவமனைகளும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வைத்து கொள்ளும். தனியார் தடுப்பூசி வினியோகம் செய்வோர் அதற்கான விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம். இதனால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசிகளை போட்டு கொள்ள முடியும்.