

மும்பை,
மராட்டியத்தில் நேற்று புனே, நாக்பூர், ஜல்னா, நந்துர்பர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்தது. இதில் ஜல்னா, சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபேயின் சொந்த மாவட்டம் ஆகும். இதையொட்டி மந்திரி ராஜேஷ் தோபே ஜல்னாவில் ஒத்திகை பணியை பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்போது தடுப்பூசி ஒத்திகை நடந்துள்ளது. இனி உண்மையான தடுப்பூசி போட மராட்டியம் தயார் நிலையில் உள்ளது. முதல் கட்டமாக கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களுக்காக தடுப்பூசி போடப்படுகிறது. இந்த பிரிவினருக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
இதேபோல ஏழை மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன். ஒரு வேளை இலவசமாக வழங்க மத்திய அரசு முன்வராவிட்டால், மராட்டிய அரசு ஏழைகளை கைவிடாது.
கொரோனா தடுப்பு பணிக்காக மத்திய அரசு வழங்கி வந்த உதவியை கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறுத்தி விட்டது. ஆனாலும் மாநில அரசு தனது பணியை திறம்பட செய்து வருகிறது. கொரோனா தடுப்பு பணிக்காக மாநில அரசிடம் போதிய நிதி உள்ளது.
மக்களுக்கு உண்மையான தடுப்பூசி போடுவதற்கு முன்னோட்டம் தான் இந்த ஒத்திகை. தடுப்பூசி போடப்படும் போது, பயனாளிகளுக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்பப்படும். அதன் பிறகு அவர்கள் தடுப்பூசி மையங்களுக்கு வர வேண்டும். அங்கு அடையாள அட்டையை காண்பித்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்ட உடன் குறிப்பிட்ட நேரத்திற்கு அங்கு அமைக்கப்பட்ட ஓய்வு மையத்தில் இருக்க வேண்டும். ஏதேனும் பக்க விளைவுகள் வந்தால் உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.