கொரோனா தடுப்பூசிகளை அரசுகளே கொள்முதல் செய்து வினியோகிக்கும் - இந்திய உற்பத்தியாளர்

கொரோனா தடுப்பூசி வந்தவுடன், அரசுகளே கொள்முதல் செய்து வினியோகிக்கும். பொதுமக்கள் நேரடியாக வாங்கத் தேவையில்லை என்று இந்திய உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசிகளை அரசுகளே கொள்முதல் செய்து வினியோகிக்கும் - இந்திய உற்பத்தியாளர்
Published on

புனே,

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், வெற்றிகரமாக கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. அதன் பரிசோதனை முடிவுகளும் திருப்திகரமாக அமைந்துள்ளன. இன்னும் பெரிய அளவில் பரிசோதனைகளை நடத்தி வருகிறது.

இந்தியாவில், தனது கூட்டாளி நிறுவனமாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற மருந்து உற்பத்தி நிறுவனத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தேர்வு செய்துள்ளது.

இந்த ஒப்பந்தப்படி, இந்தியா மற்றும் 70 குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளுக்காக சீரம் நிறுவனம் 100 கோடி டோஸ் உற்பத்தி செய்யும். இந்த ஆண்டு இறுதிக்குள் 30 கோடி முதல் 40 கோடி டோஸ் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதற்கிடையே, பார்சி இனத்தை சேர்ந்த இந்திப்பட அதிபர் ரோனி ஸ்குருவாலா, சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைமை செயல் அதிகாரியான பார்சி இனத்தை சேர்ந்த அடார் பூனவல்லாவிடம் டுவிட்டர் மூலம் ஒரு கேள்வி விடுத்தார்.

அதில், பார்சி இனத்தவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தடுப்பூசி வந்தவுடன், அவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு உண்டா? என்று வேடிக்கையாக கேட்டார்.

அதற்கு டுவிட்டர் மூலம் பதில் அளித்த அடார் பூனவல்லா, பார்சி இனத்தினருக்கு தேவைக்கு அதிகமாகவே டோஸ் வைத்திருப்போம். எங்கள் நிறுவனத்தின் ஒரு நாள் உற்பத்தி திறனே பூமியில் உள்ள எல்லா பார்சிக்களுக்கும் போதுமானதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, பார்சிக்களுக்கு எவ்வளவு டோஸ் வைத்திருப்பீர்கள் என்று ஒரு செய்தி நிறுவனம் கேட்டதற்கு சீரம் இன்ஸ்டிடியூட்டின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:-

அது, 2 பார்சிக்களுக்கு இடையே நடந்த சாதாரண, நட்புரீதியான உரையாடல்தான். தடுப்பூசி வந்தவுடன் எல்லோருக்கும் கிடைக்கும். அதைப்பற்றி இப்போதே பேச வேண்டாம். அரசுகளே கொள்முதல் செய்து வினியோகிக்கும். பொதுமக்கள் நேரடியாக வாங்கத் தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com