கொரோனா வைரஸ் 223 முறை உருமாற்றம் அடைந்துள்ளது; தீவிரம் குறைந்துவிட்டது - மத்திய சுகாதாரத்துறை மந்திரி

உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது அல்ல என்று மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
Image Courtesy : PTI
Image Courtesy : PTI
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, கொரோனா வைரஸ் பாதிப்பின் தீவிரம் கணிசமாக குறைந்துவிட்டது என்று தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக அவர் கூறியதாவது;-

"ஒரு வைரஸ் 100 முறைக்கு மேல் உருமாற்றமடையும் போது, அதன் தீவிரம் குறையும். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் இதுவரை 223 முறை உருமாற்றம் அடைந்துள்ளது.

ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மக்களைத் தாக்கும் இன்ப்ளூயன்சா பாதிப்பு போல, கொரோனாவும் நம்முடனேயே இருக்கும். ஆனால் தற்போது உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் ஆபத்தானது அல்ல. அதன் தீங்கு விளைவிக்கும் தன்மை காலப்போக்கில் கணிசமாக குறைந்துவிட்டது.

சுகாதாரம் தொடர்பான விஷயங்களில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். கொரோனா காலகட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றாக வேலை செய்தபோது நேர்மறையான முடிவுகள் கிடைத்தன.

இந்தியா ஒரு வலுவான மருந்து உற்பத்தி உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது. உலக நாடுகள் இதை அங்கீகரித்துள்ளன. இப்போது உலகின் 70 சதவீத எச்.ஐ.வி/எய்ட்ஸ் மருந்துகளை இந்தியா உற்பத்தி செய்கிறது. அதேபோல் உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல மருந்துகளை நாம் உற்பத்தி செய்கிறோம்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதால், 13 கோடி மக்கள் சிகிச்சைக்காக பணம் செலவழிக்காமல் வறுமைக் கோட்டிற்கு மேல் சென்று பயனடைந்துள்ளனர்.

முந்தைய அரசின் ஆட்சிக் காலத்தில் மருத்துவ தேவைகளுக்காக அதிக பணம் செலவிட வேண்டியிருந்ததால் 5.5 கோடி மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் தள்ளப்பட்டனர்."

இவ்வாறு மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com