

ஐதராபாத்,
கொரோனா பெருந்தொற்று தொடங்கிய காலத்தில் இருந்து விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு வைரசானது பரவுகிறது என வதந்திகள் கிளம்பி வந்தன. ஆனால், இந்த வதந்திகளில் உண்மையில்லை என மருத்துவர்கள், நிபுணர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
கொரோனாவின் முதல் அலையில் நியூயார்க்கில் விலங்கியல் பூங்காவில் மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட சம்பவங்கள் தெரியவந்தன.
இந்நிலையில், கொரோனாவின் 2வது அலையில்
அரசியல், விளையாட்டு, திரையுலகம் என பல்வேறு துறையை சேர்ந்தவர்களும் விதிவிலக்கின்றி பாதிக்கப்பட்டு பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த சூழலில், வன விலங்குகளும் கொரோனா பாதிப்புகளில் இருந்து தப்பவில்லை. அந்த வகையில் ஐதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டன.
இதனையடுத்து அவற்றின் மாதிரிகள் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் இந்த மாத தொடக்கத்தில், 4 ஆண் மற்றும் 4 பெண் என மொத்தம் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது உறுதியானது.
இதனை தொடர்ந்து அவை தனிமைப்படுத்தி வைக்கப்பட்டன. தொற்று அறியப்பட்டு 14 நாட்கள் கடந்த நிலையில், கொரோனா விதிகளின்படி, அவற்றுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய விலங்கியல் பூங்கா ஒன்றில் சிங்கங்களுக்கு அல்லது வேறு எந்த விலங்கிற்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது என்பது இதுவே முதல்முறையாகும். அதுவும் மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு கொரோனா பரவல் ஏற்பட்டு உள்ளது கண்டறியப்பட்டதும் முதன்முறையாகும்.