கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு

உயிரிழந்த 2 நபர்களுக்கு ஏற்கனவே இதய நோய் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு
Published on

திருவனந்தபுரம்,

உலகம் முழுவதும் கடந்த 2019-ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடியது. இந்த வைரஸ் பாதிப்பால் லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். 2022-ம் ஆண்டுவரை இதன் தாக்கம் அதிகமாக இருந்தது. அதன் பிறகு படிப்படியாக உலகம் சகஜ நிலைக்கு திரும்பியது. பின்பு கொரோனா பாதிப்பு பெரிய அளவில் காணப்படவில்லை. அதேபோல் உயிரிழப்புகளும் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று அவ்வப்போது தலைகாட்டி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களில் கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த 59 வயது ஆண் மற்றும் திருவனந்தபுரத்தை சேர்ந்த 64 வயது ஆண் ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72,141 ஆக அதிகரித்துள்ளது.

அதே சமயம், கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்த 2 நபர்களுக்கு ஏற்கனவே இதய நோய் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்படுவது கேரள சுகாதாரத்துறையின் தீவிர கண்காணிப்பு பணிகளை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது என்றும், கொரோனா பரவல் தீவிரமடையவில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com