கொரோனா வைரஸ் தாக்குதல்; கேரளாவில் சுற்றுலா தொழில் கடும் பாதிப்பு

கொரோனா வைரஸ் தாக்குதலால் கேரளாவில் சுற்றுலா தொழில் கடும் பாதிப்படைந்து உள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதல்; கேரளாவில் சுற்றுலா தொழில் கடும் பாதிப்பு
Published on

திருவனந்தபுரம்,

கேரள சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்பொழுது பேசிய சுற்றுலா வளர்ச்சி துறை மந்திரி கடக்கம்பள்ளி சுரேந்திரன், கேரளாவில் நிபா வைரஸ் மற்றும் கடும் வெள்ளம் ஆகியவை பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தது.

இதனை தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்குதலால் பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்களில் ஓட்டல்களில் செய்யப்பட்டு இருந்த புக்கிங்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.

நிபா வைரஸ் தாக்குதலின்பொழுது, மேற்கொள்ளப்பட்ட எதிர்மறை பிரசாரம் சுற்றுலா தொழிலை பாதிப்படைய செய்தது. இதேநிலை கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய அறிவிப்புகள் வந்த பின்னர் தொடர்கிறது. இந்த முறை இந்த பாதிப்பு கடுமையாக உள்ளது.

இதுபோன்ற பேரிடர்கள் ஏற்படும்பொழுது, ஊடகங்கள் சுயகட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன், பொதுமக்களிடையே அச்சமூட்டும் செயல்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். அதிகளவில் பரப்பப்படும் இதுபோன்ற விவகாரங்களால் சுற்றுலா தொழில் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் பொதுமக்களிடையே அச்சம் உருவாக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கேரளா கடவுளின் சொந்த நாடு என அழைக்கப்படும் சிறப்பு கொண்டது. கடந்த 2019ம் ஆண்டு 9 மாதங்களில் 8.19 லட்சம் சுற்றுலாவாசிகள் கேரளாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இது கடந்த 2018ம் ஆண்டு 10.96 லட்சம் என்ற அளவில் இருந்தது.

கேரளாவில் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் நிபா வைரஸ் காய்ச்சல் தாக்கியது. கோழிக்கோடு மாவட்டத்தில் 14 பேரும், அதன் அருகில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் 3 பேரும் என மொத்தம் 17 பேர் இந்த நோய் தாக்கியதால் பலியானார்கள்.

இதன்பின்பு அதே ஆண்டில் ஆகஸ்டில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளாவில் கனமழை பெய்தது. இதில் 60க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

இதனை தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டில் ஏற்பட்ட கனமழையால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், இந்த வருட தொடக்கத்திலேயே கொரோனா வைரஸ் தாக்குதல் கேரளாவில் பல தரப்பினரையும் பாதித்துள்ளது.

சீனா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் அங்குள்ள உகான் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வரும் கேரள மாணவி ஒருவரையும் இந்த வைரஸ் தாக்கியுள்ளது. சீனாவில் இருந்து நாடு திரும்பிய அவர் திருச்சூரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதேபோன்று உகான் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வரும் மற்றொரு மாணவருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர் கேரளாவில் உள்ள ஆலப்புழா அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதனிடையே, கேரளாவில் 3வது நபருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. காசர்கோடு பகுதியை சேர்ந்த அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார். இதனை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் உறுதிப்படுத்தி உள்ளார்.

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதனை மாநில பேரிடராக முதல் மந்திரி பினராயி விஜயன் நேற்று அறிவித்துள்ளார். தொடர்ந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை தீவிர கண்காணிப்பில் வைத்து அவர்களிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது சுற்றுலா தொழிலில் பெரும் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com