கொரோனா வைரஸ் அச்சம்; ரெயில் டிக்கெட்டுகள் மார்ச் மாதத்தில் 60 % அளவுக்கு ரத்து

கொரோனா வைரஸ் அச்சம் எதிரொலியாக மார்ச் மாதத்தில் 60 % ரெயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
கொரோனா வைரஸ் அச்சம்; ரெயில் டிக்கெட்டுகள் மார்ச் மாதத்தில் 60 % அளவுக்கு ரத்து
Published on

சென்னை,

சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகம் முழுவதும் 155க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது. இதனால் உலக அளவில் பலி எண்ணிக்கை 8 ஆயிரத்திற்கும் கூடுதலாக சென்றுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்து உள்ளது. 3 பேர் பலியாகி உள்ளனர். 13 பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் (பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் உள்பட) மார்ச் 31ந்தேதி வரை மூட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தேவையற்ற பயணங்களை தவிர்க்கும்படியும் மக்களிடம் கேட்டு கொண்டுள்ளது. இந்த வருடம் மார்ச் மாதத்தில் 60 சதவீதம் அளவுக்கு ரெயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன என நாடாளுமன்ற குழுவுக்கு இன்று ரெயில்வே அதிகாரிகள் தகவல் அளித்து உள்ளனர்.

இதேபோன்று கொரோனா வைரஸ் ஆபத்து தடுப்பு நடவடிக்கையாக பயணிகள் அல்லாதோர் எண்ணிக்கையை குறைக்க வருகிற மார்ச் 31ந்தேதி வரை, டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல், சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டுகளை ரூ.10ல் இருந்து ரூ.50 ஆக தெற்கு ரெயில்வே உயர்த்தி உள்ளது.

தெற்கு ரெயில்வே இன்று பல்வேறு ரெயில்களை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து மதுரை செல்லும் மதுரை துரந்தோ எக்ஸ்பிரஸ், சென்னை துரந்தோ எக்ஸ்பிரஸ், சென்னை சென்டிரலில் இருந்து திருவனந்தபுரம் சென்டிரல் வரை செல்லும் சூப்பர் ஏ.சி. எக்ஸ்பிரஸ், மட்காவன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 26 ரெயில்கள் வருகிற 23ந்தேதியில் இருந்து ஏப்ரல் 2ந்தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சம் சூழ்ந்துள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள தயாராகமல் இருந்ததற்காக, ரெயில்வே வாரிய தலைவருக்கு நாடாளுமன்ற குழு கண்டனம் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com