‘ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம்’ - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட்டு ஆலையை திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
‘ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம்’ - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சையில் முக்கியப்பங்காற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் உற்பத்தி கூடத்தில் நாளொன்றுக்கு 500 டன் ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும் என்று அந்த மனுவில் வேதாந்தா தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஸ்டெர்லைட் ஆலை தாக்கல் செய்த அந்த இடைக்கால மனுவை அவசர வழக்காக விசாரித்த சுப்ரீம் கோர்ட் இந்த மனு தொடர்பாக பதிலளிக்கும்படி மத்திய அரசிடம் தெரிவித்தது.

இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் சுகாதாரத்தேவைக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து வாதிட்ட ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் வழக்கறிஞர், அனுமதி வழங்கினால் 6 நாட்களில் ஆக்சிஜன் தயாரிப்போம் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் இடைக்கால மனு மீது பதிலளிக்க தமிழக அரசு அவகாசம் கோரிய நிலையில் வழக்கு விசாரணையை நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018 ஆம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போராட்டத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com