5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூ, கோவா ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
Published on

புதுடெல்லி

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பிப்ரவரி 10 முதல் இன்று (மார்ச் 7 ந்தேதி) வரை சட்டசபை தேர்தல்கள் 7 கட்டங்களாக நடைபெற்றன

403 உறுப்பினர்களைக் கொண்ட உத்தர சட்டசபைக்கு ஏழு கட்டங்களாகவும்,60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூரின் சட்டசபைக்கு 2 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற்றது.

117 உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கும், உத்தரகாண்டின் 70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கும், கோவாவின் 40 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த 5 மாநிலங்களில் பஞ்சாப் தவிர நான்கில் பா.ஜனதா. ஆட்சி நடைபெற்றது. அதே நேரத்தில் பஞ்சாபில் ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸ் இந்த முறை கடும் போட்டியை சந்திக்கிறது.

2017 உத்தரபிரதேச தேர்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில் பா.ஜ.க. 312 இடங்களையும், சமாஜ்வாதி கட்சி 47 இடங்களையும், பகுஜன் சமாஜ் 19 இடங்களையும், காங்கிரஸ் 7 இடங்களையும் கைப்பற்றியது.

பஞ்சாபில், முந்தைய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 117 இடங்களில் 77 இடங்களை வென்றது, அதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி 20, அகாலி தளம் 15 மற்றும் பா.ஜ.க. 3. பஞ்சாபில் மீண்டும் ஆட்சிக்கு வர, முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் கடும் போட்டியை சந்தித்து வருகிறது.

உத்தரகாண்டில் 2017 இல் பா.ஜ.க. 70 இடங்களில் 56 இடங்களை வென்றது, அதைத் தொடர்ந்து காங்கிரஸ் 11 இடங்களை வென்றது.

மணிப்பூரில் முந்தைய சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 60 இடங்களில் பா.ஜனதா 21 இடங்களையும், காங்கிரஸ் 28 இடங்களையும் வென்றது.

2017 கோவா தேர்தலில் மொத்தமுள்ள 40 இடங்களில் பா.ஜனதா 13 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும் வெற்றி பெற்றது.

உத்தரபிரதேசத்தில் பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், மாநிலத்தில் மீண்டும் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைக்கும் என தெரிவித்தன.

உத்தரகாண்டில் ஆளும் பா.ஜ.க.வும், எதிர்க்கட்சியான காங்கிரசும் கடும் போட்டியில் இருப்பதாக பல்வேறு கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. ஆனாலும் பா.ஜ.க.வுக்கு கருத்துக்கணிப்புகள் ஆதரவாக அமைந்துள்ளன.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று பல்வேறு கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

மணிப்பூரில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அமைந்துள்ளன.

கோவாவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும், பா.ஜ.க.வை விட காங்கிரஸ் முன்னிலை பெறும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன.

இந்த கருத்துக்கணிப்புகள் பலிக்குமா?, 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது இன்று தெரிந்து விடும்.

இன்று காலை 8 மணிக்கு 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது வாக்கு எண்ணிக்கையின்போது முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com