புதுவையில் ஆட்சி கவிழ்ப்பு அரசியல் அநாகரிகம்; இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பேட்டி

புதுவையில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ப்பு அரசியல் அநாகரிகம் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.
புதுவையில் ஆட்சி கவிழ்ப்பு அரசியல் அநாகரிகம்; இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பேட்டி
Published on

ஆலோசனை கூட்டம்

இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கருவடிக்குப்பத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.கூட்டத்தில் தற்போது புதுவையில் உள்ள அரசியல் நிலவரம், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

முன்னதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசியல் அநாகரிகம்

புதுவை மாநிலத்தில் முன்பு இருந்த கவர்னர் கிரண்பெடிக்கும், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே ஏற்பட்ட அதிகார போட்டியால் மாநிலம் வளர்ச்சி அடையவில்லை. ஆட்சி முடியும் நிலையில் அவசர அவசரமாக ஆட்சி கவிழ்ப்பு நடந்துள்ளது. இது அரசியல் அநாகரிகம். தேவையில்லாமல் நாராயணசாமிக்கு மக்கள் மத்தியில் அனுதாபத்தை தேடி தந்துள்ளது.

தற்போது உள்ள கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். புதுவையில் நல்லாட்சி அமைய வேண்டும். இங்கு ஆன்மிக அரசியல் தான் வேண்டும். இது தொடர்பாக நான் ரங்கசாமியை விரைவில் சந்தித்து பேச உள்ளேன்.

விவேகானந்தர் சிலை

புதுவையில் விவேகானந்தருக்கு சிலை அமைக்க வேண்டும். புதுச்சேரி என்றாலே மதுச்சேரி என்று அழைக்கப்படுகிறது. இதனை மாற்ற இங்கு பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com