திருமணமான ஒரே மாதத்தில் காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை

காதல் திருமணம் செய்த ஒரே மாதத்தில், கணவன் - மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமான ஒரே மாதத்தில் காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை
Published on

சித்திபேட்டை,

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் கொண்டபாக்க கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி (21 வயது), தையல் தொழிலாளி. கோமூர் பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வினய் (23 வயது), கூலித் தொழிலாளி. கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்த இவர்கள், இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த மாதம் 9-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமான சில நாட்களிலேயே அஞ்சலி செல்போனில் நீண்ட நேரம் பேசுவதாக வினய் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 7-ந்தேதி ஏற்பட்ட மோதலில், ஆத்திரமடைந்த வினய் தனது மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துள்ளார்.

தொடர்ந்து, வினய் தனது மனைவியை போனில் தொடர்பு கொண்டு சமாதானம் செய்ய முயன்றபோது, அஞ்சலி கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் வினய் போன் செய்தபோது அஞ்சலி அதனை எடுக்கவில்லை. இதற்கிடையே இந்த சம்பவத்தில் கடும் மனஉளைச்சலில் இருந்த அஞ்சலி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஐதராபாத்தில் வேலையை முடித்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த வினய்க்கு, தனது மனைவி தற்கொலை செய்துகொண்ட தகவல் கிடைத்தது. ராயபுரம் கிராமம் அருகே வந்தபோது இந்த தகவலை கேட்ட அவர் அதிர்ச்சியில் உறைந்தார். உடனே தனது தந்தையை போனில் தொடர்பு கொண்டு இதுபற்றி கூறி கதறி அழுதுள்ளார். பின்னர், தான் இருக்கும் இடத்தின் 'லொகேசனை' நண்பர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பிவிட்டு, அங்கிருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரே மாதத்தில் காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com