குளிப்பதை வீடியோ எடுத்ததாக கூறி பெண்ணை மிரட்டிய இளைஞர்; வீட்டிற்கு வரவழைத்து கொலை செய்த தம்பதி

ஹர்திக் பதிவு செய்ததாக கூறப்படும் அந்த வீடியோவை எலக்ட்ரீசியனும், அவரது மனைவியும் பார்க்கவே இல்லை என்பது விசரணையில் தெரியவந்துள்ளது.
குளிப்பதை வீடியோ எடுத்ததாக கூறி பெண்ணை மிரட்டிய இளைஞர்; வீட்டிற்கு வரவழைத்து கொலை செய்த தம்பதி
Published on

காந்திநகர்,

குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவர் ஹர்திக். இவரது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் எலக்ட்ரீசிரியன் ஒருவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அந்த எலக்ட்ரீசியனின் மனைவி குளிப்பதை ஹர்திக் மறைந்திருந்து வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த பெண்ணிடம் ஹர்திக், தனது செல்போனில் அந்த பெண்ணின் நிர்வாண வீடியோ இருப்பதாகவும், தன்னுடைய ஆசைக்கு இணங்கவில்லை என்றால் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவேன் என்றும் கூறி மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அந்த பெண், வேறு வழியின்றி அந்த இளைஞரின் மிரட்டலுக்கு அடிபணிந்துள்ளார்.

ஆனால் அதன் பிறகும் ஹர்திக் தொடர்ந்து அந்த பெண்ணை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த அந்த பெண், நடந்த விஷயத்தை தனது கணவரிடம் கூறி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர், முதலில் இந்த விவகாரம் குறித்து ஹர்திக்கின் பெற்றோரிடம் கூறலாமா? என்று யோசித்துள்ளார். ஆனால் அவ்வாறு செய்தால் தங்கள் குடும்ப மானம் போய்விடும் என்று பயந்து வேறு திட்டத்தை தீட்டியுள்ளனர்.

இதன்படி, ஹர்திக்கை கொலை செய்து விடுவது என்று கணவனும், மனைவியும் முடிவு செய்தனர். கடந்த 11-ந்தேதி, அந்த தம்பதியின் 3 குழந்தைகளும் பள்ளிக்கு சென்ற பின்னர், ஹர்திக் அந்த பெண்ணுக்கு போன் செய்து, ‘இன்று நான் வீட்டிற்கு வருகிறேன், தயாராக இரு’ என்று கூறியுள்ளான். அந்த பெண்ணின் கணவர் தனது பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே செல்வது போல் கிளம்பிச் சென்றார்.

இதை மறைந்திருந்து கவனித்த ஹர்திக், அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து கட்டிலில் படுத்துக் கொண்டு, ஆபாசமாக பேசத் தொடங்கியுள்ளான். அந்த சமயத்தில், திட்டமிட்டபடி வீட்டிற்கு திரும்பி வந்த பெண்ணின் கணவர், கட்டிலில் படுத்திருந்த ஹர்திக் மீது ஏறி அமர்ந்து கொண்டு அவனது கழுத்தை வயரால் இறுக்கினார். அவரது மனைவி ஹர்திக்கின் கைகளை பிடித்துக் கொண்டார். சிறிது நேரத்தில் மூச்சு திணறி ஹர்திக் உயிரிழந்தான்.

பின்னர் கணவனும், மனைவியும் சேர்ந்து ஹர்திக்கின் உடலை பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்து, வீட்டை பூட்டிவிட்டு வெளியே கிளம்பிச் சென்றனர். பள்ளிக்கு சென்றிருந்த தங்கள் 3 குழந்தைகளையும் அழைத்து வந்து அவர்களது தாத்தா வீட்டில் விட்டனர். பின்னர் கணவனும், மனைவியும் ஊரை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகினர்.

இதனிடையே, உயிரிழந்த ஹர்திக்கின் தந்தை தனது மகனை காணவில்லை என போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், சி.சி.டி.வி. ஆதாரங்களின் உதவியோடு ஹர்திக்கின் உடலை எலக்ட்ரீசியனின் வீட்டில் இருந்து கைப்பற்றினர். பின்னர் அந்த உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதோடு தலைமறைவாக இருந்த தம்பதியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

அதே சமயம், இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக கருதப்படும் ஹர்திக்கின் செல்போனை கொலை நடந்த சமயத்தில் எலக்ட்ரீசியன் பிடுங்கி உடைத்து சாலையோரம் வீசியுள்ளார். ஆனால் ஹர்திக் பதிவு செய்ததாக கூறப்படும் அந்த வீடியோவை எலக்ட்ரீசியனும், அவரது மனைவியும் இதுவரை பார்க்கவே இல்லை. எனவே, உண்மையில் ஹர்திக் வீடியோவை பதிவு செய்திருந்தாரா?அல்லது மிரட்டுவதற்காக பொய் சொன்னாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com