முழு அடைப்புக்கு முன்பு கோர்ட்டு உத்தரவுகளை மனதில் கொள்ள வேண்டும்; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி

முழு அடைப்பு நடத்துவதற்கு முன்பு கோர்ட்டு உத்தரவுகளை மனதில் கொள்ள வேண்டும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
முழு அடைப்புக்கு முன்பு கோர்ட்டு உத்தரவுகளை மனதில் கொள்ள வேண்டும்; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
Published on

பெங்களூரு:

துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காவிரி விவகாரத்தில் நடைபெறும் போராட்டங்களை நாங்கள் கட்டுப்படுத்த மாட்டோம். ஆனால் அமைதியை காக்க வேண்டியது அவசியம். மக்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படக்கூடாது. ஜனநாயகத்தில் போராட்டம் நடத்துவது அனைவரின் உரிமை. இதை நாங்கள் ஒடுக்க மாட்டோம். எங்கள் கட்சியினரும் போராட்டம் நடத்தலாமா? என்று என்னிடம் கேட்டனர்.

இது உங்களின் உரிமை, நீங்கள் போராடலாம் என்று கூறினேன். ஆனால் முழு அடைப்பு நடத்துவதற்கு முன்பு கோட்டு உத்தரவுகளை மனதில் கொள்ள வேண்டும். ஊடக பிரசாரத்திற்காக வெறுமனே முழு அடைப்பு நடத்துவதாக கூறுவது சரியல்ல. இதுபோன்ற விஷயங்கள் சட்ட ரீதியாக சிக்கல்களை ஏற்படுத்தும். இந்த அனைத்து அம்சங்களையும் மனதில் வைத்து முழு அடைப்பு நடத்துகிறவர்கள் முடிவு செய்யட்டும்.

காவிரி படுகையில் சில பகுதிகளில் மழை பெய்வதால், அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. நாங்கள் செயற்கை மழையை பெய்விப்பது குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளோம். இந்த விஷயத்தில் 2, 3 விதமான கருத்துகள் இருக்கின்றன. இனி வரும் நாட்களில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பது கடினம். முழு அடைப்பு விஷயத்தில் ஒரு மந்திரியாக என்னால் எதுவும் கூற முடியாது.

கோர்ட்டு உத்தரவை மதிக்க வேண்டும், அதே நேரத்தில் மக்களின் நலனையும் காக்க வேண்டும். எனது நிலை மற்றும் அரசின் நிலை இது தான். எதுவாக இருந்தாலும் சரி, கர்நாடகத்தின் நலனை அரசு காக்கும். இது எங்களின் கடமை. பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் முழு அடைப்புக்கு எந்த மதிப்பும் இருக்காது. முழு அடைப்பு விஷயத்தில் அமைப்புகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் விவகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com