வீடு புகுந்து தாக்கிய வழக்கு: தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக நீதிமன்றம் மீண்டும் உத்தரவு

2022ம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள சகோதரர் வீட்டிற்குள் புகுந்து தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அவர் மீது 6 பிரிவுகளில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
 மரிய வில்சன்
Published on

புதுச்சேரி,

புதுச்சேரியை சேர்ந்தவர் நெஸ்தோர். இவரது மகன்கள் மரிய குளோத் (வயது 47) மரிய வில்சன் (வயது 44). இதில் மரிய வில்சன் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது தமிழக நிதி அமைச்சராக உள்ளார்.

இந்த நிலையில் மரிய வில்சனுக்கும், அவரது அண்ணன் மரிய குளோத்துக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்துள்ளது.

வீடு புகுந்து தாக்குதல்

கடந்த 8.8.2022-ந் தேதிஅன்று மரிய வில்சன், அவரது தந்தை நெஸ்தோர் ஆகியோர், புதுவை ' எழில் நகரில் உள்ள மரிய குளோத் வீட்டுக்குள் புகுந்து அவரையும், அவரது மனைவி கேர்லின் குளோத்தையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து கேர்லின் குளோத் புதுவையில் உள்ள லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மரிய வில்சன், நெஸ்தோர் ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி சேரலாதன் முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் மரிய வில்சன் மீதான குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.

இந்த குற்றப்பத்திரிகை நகலை தமிழக அமைச்சர் மரிய வில்சன் இன்று (சனிக்கிழமை) நேரில் ஆஜராகி பெற வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

இந்தநிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சகோதரர் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து தாக்கிய வழக்கில் அமைச்சர் மரிய வில்சன் இன்று ஆஜராகாத நிலையில் 10ம் தேதி ஆஜராக புதுச்சேரி நீதிமன்றம் மிண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com