இயற்கைக்கு மாறான உறவுக்கு அழைத்து தொல்லை.. கணவர் மீதான வழக்கை ரத்து செய்ய கோர்ட்டு மறுப்பு


இயற்கைக்கு மாறான உறவுக்கு அழைத்து தொல்லை.. கணவர் மீதான வழக்கை ரத்து செய்ய கோர்ட்டு மறுப்பு
x

பரத நாட்டிய கலைஞரான தனது மனைவிக்கு தொல்லை கொடுத்த கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் வசித்து வரும் ஒரு வாலிபருக்கும், ஒரு இளம்பெண்ணுக்கும் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்பு தம்பதி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

மேலும் இயற்கைக்கு மாறான முறையில் உறவு கொள்ளும்படி அந்த பெண்ணுக்கு, கணவர் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. பரத நாட்டிய கலைஞரான அந்த பெண்ணை நாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் கணவர் தடை விதித்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக தனது கணவர், மாமனார், மாமியார் மீது கொத்தனூர் போலீசில் அந்த பெண் புகார் அளித்தார். அதன்பேரில், அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையில், தன் மீதும், தனது பெற்றோர் மீதும் பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி அந்த வாலிபர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அதையடுத்து அவர் மீதான கிரிமினல் வழக்குக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அந்த பெண் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த பெண் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், மனுதாரரை அவரது கணவர் இயற்கைக்கு மாறான உறவுக்கு அழைத்து தொல்லை கொடுத்துள்ளார். அந்த பெண்ணை தாக்கி, அவரது கையையும் முறித்துள்ளதால் வழக்கை ரத்து செய்ய கூடாது என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "மனைவிக்கு கணவர் தொல்லை கொடுத்து தாக்குதல் நடத்தி இருப்பது நிரூபணமாகி உள்ளது. அதனால் அந்த வாலிபர் மீது பதிவான கிரிமினல் வழக்கு ரத்து செய்யப்படாது. இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதே நேரத்தில் அந்த பெண்ணின் மாமனாரும், மாமியாரும் எந்த தவறும் செய்யாததால், அவர்கள் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்' என்று தெரிவித்தார்.

1 More update

Next Story