2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ‘கோவேக்சின்’ தடுப்பூசி - பரிசோதனைக்கு மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி

இந்தியாவில் 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ‘கோவாக்சின்’ தடுப்பூசியை தன்னார்வலர்களிடம் செலுத்தி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ‘கோவேக்சின்’ தடுப்பூசி - பரிசோதனைக்கு மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி
Published on

புதுடெல்லி,

ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள, கோவேக்சின் தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான தடுப்பூசியை தயாரிக்கும் முயற்சியில் பாரத் பயோடெக் நிறுவனம் ஈடுபட்டு வந்தது.

தொடர்ச்சியான ஆய்வுகளின் முடிவில், தற்போது 2 முதல் 18 வயது வரையிலானவர்களுக்கான கோவேக்சின் தடுப்பூசியை, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கான முதற்கட்ட ஆய்வக சோதனைகளை ஏற்கனவே முடித்துள்ள நிலையில், 2 மற்றும் 3ம் கட்ட பரிசோதனையை மேற்கொள்வதற்கு நிபுணர் குழுவிடம் அந்நிறுவனம் அனுமதி கோரியிருந்தது.

அதனை ஆய்வு செய்த மத்திய மருந்து மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் நிபுணர் குழு, 2 மற்றும் 3ம் கட்ட பரிசோதனையை மேற்கொள்ளலாம் என இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்திடம் பரிந்துரை வழங்கியிருந்தது.

இதையடுத்து நிபுணர் குழு வழங்கிய பரிந்துரையை ஏற்று, தற்போது 2 மற்றும் 3ம் கட்ட பரிசோதனையை மேற்கொள்வதற்கு பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் 525 தன்னார்வலர்களிடம் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு, 2 மற்றும் 3ம் கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com