முதியோர், முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி: நாளை முதல் தொடக்கம்

நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரிப்பால் கொரோனா 3-வது அலை பரவல் ஏற்பட்டுள்ளது.
முதியோர், முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி: நாளை முதல் தொடக்கம்
Published on

புதுடெல்லி,

நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரிப்பால் கொரோனா 3-வது அலை பரவல் ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டில் தினசரி பாதிப்பு தினம் தினம் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டது. .

இதுதொடர்பாக கிறிஸ்துமஸ் பண்டிகையன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, 2022 ஜனவரி 3ம் தேதி முதல் 15 முதல் 18வயதுள்ள பிரிவினருக்கு தடுப்பூசியும், 10ம் தேதி முதல் இணைநோய்கள் இருக்கும் 60வயதுக்கு மேற்பட்டோர், முன்களப்பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்படும் என அறிவித்தார்.

பிரதமர் மோடி அறிவிப்பின், 15 முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டு இதுவரை 2 கோடி பேர் வரை தடுப்பூசி செலுத்திவிட்டனர்.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தும் பணி நாளை நாடுமுழுவதும் தொடங்க உள்ளது. இதற்கான பதிவு செய்தல் கோவின் தளத்தில் நேற்று முதலே தொடங்கிவிட்டது. இந்தியாவில் 60வயதுக்கு மேற்பட்டோர் மட்டும் 13.75 கோடி பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்த வருவோர் 2-வது தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில்.....

தமிழகத்தில் இதுவரை 8 கோடியே 83 லட்சத்து 2,071 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது. இதில் மாநில அளவில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 87.35 சதவீதம் ஆகும். 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 61.46 சதவீதமாகும். சென்னையை பொறுத்த வரை 92 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 2-ம் தவணை தடுப்பூசி 71 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் கொரோனா உருமாறி ஒமைக்ரான் வைரசாக வேகமாக பரவி வருவதால் அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு கட்டமாக பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியும் நாளை தொடங்குகிறது. சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. நகரில் உள்ள இமேஜ்ஆடிட் டோரியத்தில் நடைபெறும் இந்த முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். முன்களப் பணியாளர்கள், 2 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட தகுதியானவர்கள்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழகத்தில் நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இதை தொடங்கி வைக்கிறார். முதல் தவணை மற்றும் 2-ம் தவணை எந்தவகை தடுப்பூசி செலுத்தப்பட்டதோ, அந்த தடுப்பூசியே பூஸ்டர் டோஸ் ஆக போடப்படும்.

தமிழகத்தில் 35.46 லட்சம் பேர் தடுப்பூசி போடுவதற்கு தகுதியானவர்களாக உள்ளனர்.இதில் 9.78 லட்சம் பேர் முன்கள பணியாளர்கள். 5.65 லட்சம் பேர் சுகாதாரப் பணியாளர்கள். 20.03 லட்சம் பேர் இணை நோயாளிகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

இவர்களில் தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் கடந்தவர்கள், 2021 ஏப்ரல் 14-க்கு முன்வரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியானவர்கள். அந்த வகையில் 4 லட்சம் பேர் நாளை பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com