மார்ச் மாதம் முதல் 12 - 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி..! மத்திய அரசு தகவல்

12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு மார்ச் மாதம் முதல் தடுப்பூசி போட வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கியது. சுகாதார பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்பட்டது. பிப்ரவரி 1-ந்தேதி முதல் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், இணைநோய்களை உடைய 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கடந்த மார்ச் 1-ந்தேதி தடுப்பூசி போடுவது தொடங்கியது. ஏப்ரல் 1-ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது தொடங்கியது.

மே 1 முதல் 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. கடந்த 3-ந்தேதி முதல் 15-18 வயது பிரிவினருக்கு தடுப்பூசி போடுவது தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் தடுப்பூசி திட்டம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா கூறியதாவது:-

15-18 வயது பிரிவினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இந்த பிரிவினரில் 7 கோடியே 40 லட்சத்து 57 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் 3 கோடியே 45 லட்சம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு விட்டது. 4 வாரங்களில் 2-வது டோஸ் தடுப்பூசி போடப்படும்.

தடுப்பூசி இன்னும் செலுத்திக்கொள்ளாத இந்த வயது பிரிவினர் இந்த மாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தப்பட்டு விடுவார்கள். இந்த வயது பிரிவினருக்கு 2-வது டோஸ் பிப்ரவரி மாத இறுதிக்குள் போடப்பட்டு விடும்.

15-18 வயது பிரிவினருக்கு தடுப்பூசி போட்டு முடித்த உடன் 12-14 வயது பிரிவினருக்கு மார்ச்சில் தடுப்பூசி போடுவதற்கான கொள்கை முடிவை அரசு எடுக்கும் என்று அவர் கூறினார்.

முன்னதாக நமது நாட்டில் 12-14 வயது பிரிவினர் 7.5 கோடி பேர் தடுப்பூசி போடுவதற்காக காத்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com