

புதுடெல்லி,
கொரோனா வைரசின் 2-வது அலையால் மிகக் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள இந்தியாவுக்கு சர்வதேச நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன. அந்த வகையில், இந்திய பிரதமர் மோடியுடன் இன்று தொலைபேசி வாயிலாக பேசிய பூடான் பிரதமர் லோடே ஷெரிங், கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.
நெருக்கடியான காலத்தில் இந்தியாவுக்கு ஆதரவு அளிப்பதற்காக பூடான் பிரதமருக்கும் பூடான் மக்களுக்கும் தனது நன்றியை பிரதமர் மோடி இந்த உரையாடலின் போது தெரிவித்துக்கொண்டார். அதேபோல், பூடானில் கொரோனாவுக்குஎதிராக எடுத்து வரும் நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி பாராட்டியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பூடானில் இதுவரை 1,241- பேர் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், பூடானில் வயது வந்த மக்களில் 93 சதவீதம் பேருக்கு கடந்த மாதமே தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.