கொரோனா பரவல் தீவிரம்: கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய குழு விரைந்தது

கொரோனா பரவல் தீவிரமாக உள்ள கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய குழு விரைந்துள்ளது.
கொரோனா பரவல் தீவிரம்: கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய குழு விரைந்தது
Published on

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிற மாநிலங்களாக கேரளா, கர்நாடகம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மேற்குவங்காளம் ஆகியவை உள்ளன. உதாரணத்துக்கு கேரளாவில், தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 17 ஆயிரத்து 929 ஆக உள்ளது.

இது நாட்டின் மொத்த பாதிப்பில் 4.3 சதவீதம் ஆகும். இங்கு 10 லட்சம் பேருக்கு 8,906 பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இங்கு 2.22 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். அந்த வகையில் மீட்பு விகிதம் 69.90 சதவீதமாக உள்ளது. தற்போது 94 ஆயிரத்து 609 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இது நாட்டின் மொத்த அளவில் 11.8 சதவீதம் ஆகும். இங்கு 10 லட்சம் பேருக்கு 53 ஆயிரத்து 518 ஆக உள்ளது.

இதே போன்று கர்நாடகத்தில் 7 லட்சத்து 43 ஆயிரத்து 848 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இது நாட்டின் பாதிப்பில் 10.1 சதவீதம் ஆகும். 10 லட்சம் பேருக்கு 11 ஆயிரத்து 10 பேருக்கு தொற்று பாதிப்பு உள்ளது. 6 லட்சத்து 20 ஆயிரத்து 8 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். மீட்பு விகிதம் 83.35 சதவீதம் ஆகும். தற்போது 1 லட்சத்து 13 ஆயிரத்து 557 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இது தேசிய அளவில் 14.1 சதவீதம்.

இங்கு கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில நிர்வாகங்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக மத்திய குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்தது.

இதுபற்றி சுகாதார அமைச்சகம் குறிப்பிடுகையில், கொரோனாவை கட்டுப்படுத்துவதை வலுப்படுத்துதல், கண்காணிப்பு, பரிசோதனை, தொற்று தடுப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு திறமையான மருத்துவ சிகிச்சை அளிப்பதில் மாநிலங்களுக்கு மத்திய குழு உதவும். உரிய நேரத்தில் தொற்று பாதிப்பை கண்டறிவதிலும், தொடர்சிகிச்சை அளிப்பதிலும் எழுந்துள்ள சவால்களை திறமையாக எதிர்கொள்வதற்கு மத்திய குழு வழிகாட்டும் என கூறியது.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் அனுப்பப்பட்ட குழுக்களில் ஒரு இணைச்செயலாளர், ஒரு பொது சுகாதார நிபுணர், ஒரு மருத்துவ நிபுணர் இடம் பெற்றுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com