

புதுடெல்லி,
இந்தியாவில் காணப்படும் கொரோனா வைரஸ் வகைகளை மரபணு வரிசைப்படுத்தி ஆய்வு செய்வதற்காக, 10 தேசிய ஆய்வுக்கூடங்கள் கொண்ட குழுமத்தை (இன்சாகாக்) மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த டிசம்பர் மாதம் உருவாக்கியது. அந்த ஆய்வுக்கூடங்களில் கொரோனா வகைகளை மரபணு வரிசைப்படுத்தும் ஆய்வு நடந்து வருகிறது.
மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் அனுப்பி வைத்த 10 ஆயிரத்து 787 கொரோனா உறுதி செய்யப்பட்ட மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், இதுவரை 771 உருமாறிய கொரோனாவை இன்சாகாக் குழுமம் கண்டுபிடித்துள்ளது. இவற்றில், 736 மாதிரிகள், இங்கிலாந்தை சேர்ந்த உருமாறிய கொரோனாவை சேர்ந்தவை. 34 மாதிரிகள் தென்ஆப்பிரிக்க உருமாறிய கொரோனாவையும், ஒரு மாதிரி, பிரேசில் உருமாறிய கொரோனாவையும் சேர்ந்தவை. 18 மாநிலங்களில் இந்த உருமாறிய கொரோனாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதே சமயத்தில், சர்வதேச பயணிகள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோரிடம் பெறப்பட்ட மாதிரிகளிலும் மரபணு வரிசைப்படுத்தும் ஆய்வு நடந்து வருகிறது. மாநிலங்கள் அனுப்பி வைத்த மாதிரிகளில், புதிய இருமுறை மரபணு உருமாறிய கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை கொரோனா, நோய் எதிர்ப்பு சக்திக்கு கட்டுப்படாதவை, தொற்றை அதிகப்படுத்தக்கூடியவை.
15 முதல் 20 சதவீத மாதிரிகளில் இந்தவகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்பு கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனாக்களுடன் ஒத்துப்போகாமல், இவை புதிய ரகமாக காணப்படுகின்றன.
மராட்டியம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் இவை கண்டறியப்பட்டுள்ளன. இங்கிலாந்து, டென்மார்க், சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்பட 16 நாடுகளிலும் இவை கண்டறியப்பட்டுள்ளன.
இருப்பினும், இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததற்கு இந்த மரபணு உருமாறிய கொரோனாக்கள்தான் காரணமா என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய குழுவை சுகாதார அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் கே.சிங், அகில இந்திய மருத்து விஞ்ஞான கழகம் மற்றும் அகில இந்திய சுத்தம் மற்றும் பொது சுகாதாரம் நிறுவனம் உள்ளிட்ட மத்திய சுகாதார அமைச்சக நிறுவனங்களின் நிபுணர்கள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் கொரோனா வேகமாக பரவி வருவதற்கான காரணம் மற்றும் பலி எண்ணிக்கை உயிருவதற்காக காரணம் குறித்து ஆய்வு செய்வார்கள். இதுமட்டுமல்லாமல் நோயாளிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் சோதனை முடிவடைந்த நிலையில் அதன் தன்மை குறித்தும் விரிவாக விசாரணை நடத்தவுள்ளனர். இவற்றில் உருமாறிய கொரோனா பரவல் உள்ளதா எனவும், அதன் தாக்கம் பற்றியும் விரிவாக ஆய்வு செய்ய உள்ளனர்.
கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் சட்டீஸ்கர் மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகரிலும் கொரோனா பரவல் வேகமும், கொரோனா மரணமும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்ய மத்திய குழு அங்கு பயணம் செய்கிறது.