கொரோனா 2-வது அலையில் ஒரு கோடி பேர் வேலை இழப்பு - ஆய்வில் தகவல்

கொரோனா 2-வது அலையில் ஒரு கோடி பேர் வேலை இழந்து உள்ளனர் என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஆய்வில் தெரியவந்து உள்ளது.
கொரோனா 2-வது அலையில் ஒரு கோடி பேர் வேலை இழப்பு - ஆய்வில் தகவல்
Published on

புதுடெல்லி

கொரோனா அலையால் இந்தியாவில் ஒரு கோடி பேர் வேலையிழந்துள்ளனர்' என, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் 1.75 லட்சம் வீடுகளில் நாடு தழுவிய ஆய்வை நடத்தியது. இது கடந்த ஒரு வருடத்தில் வருமானம் ஈட்டுவதில் கவலையளிக்கும் போக்குகளைத் காட்டுகிறது.

ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 3 சதவீதம் பேர் மட்டுமே வருமானம் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளனர், 55 சதவீதம் பேர் தங்கள் வருமானம் குறைந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.கூடுதலாக 42 சதவிகித மக்கள் தங்கள் வருமானம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்ததைப் போலவே இருப்பதாகக் கூறினர்.

இந்திய பொருளாதார கண்காணிப்பு மைய அமைப்பின் தலைவர் மகேஷ் வியாஸ் கூறி உள்ளதாவது:-

கடந்த ஆண்டு தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து சுமார் 97 சதவீத குடும்பங்களின் வருமானம் குறைந்துவிட்டது.இரண்டாவது அலை காரணமாக 1 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் வேலை இழந்துள்ளனர்,

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு, தற்போது 2வது அலையில் மீண்டும் பெரிய அளவில் வெளிவர தொடங்கியுள்ளது. வேலையிழப்பு வீதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகவில்லை. வேலையில்லா திண்டாட்டம் ஏப்ரல் இறுதியில் 8 சதவீதமாக உயர்ந்து இருந்தது. மே 31ம் தேதியில் இது 12 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கொரோனா 2வது அலையால் நாடுமுழுவதும் ஒரு கோடி பேர் வேலையிழந்துள்ளதாகபுள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி கோவிட் பாதிப்பு தொடங்கியதில் இருந்தே 97 சதவீத வீடுகளில் முந்தைய நிலையை ஒப்பிட்டால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

லாக்டவுன் காலத்தில் தினக்கூலி வாங்கும் தொழிலாளர்களும், சிறு தொழில், வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதால் வேலையின்மை விகிதம் 10 சதவீத்தை எட்டும். நகர்ப்புறங்களில் இதன் தாக்கம் மிகவும் கடுமையானதாக இருக்கும்.

வேலைகளை இழக்கும் மக்கள் வேலைவாய்ப்பை திரும்ப பெறுவது கடினம் . முறைசாரா துறை வேலைகள் விரைவாக திரும்பி வரும்போது, முறையான துறை மற்றும் சிறந்த தரமான வேலை வாய்ப்புகள் திரும்பி வர ஒரு வருடம் வரை ஆகும்.

தேசிய ஊரடங்கால் வேலையின்மை விகிதம் 2020 மே மாதத்தில் 23.5 சதவீதமாக உயர்ந்தது. 3-4 சதவீத வேலையின்மை விகிதம் இந்திய பொருளாதாரத்திற்கு "இயல்பானது" என்று கருதலாம்.

தொழிலாளர் பங்கேற்பு விகிதம், அல்லது சந்தையில் இருக்கும் உழைக்கும் மக்கள்தொகையின் சதவீதம், தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளான 42.5 சதவீதத்திலிருந்து இப்போது 40 சதவீதமாகக் குறைந்துள்ளது என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com