

கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் உள்ள பர்த்வானில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 60 வயது பெண், அந்த மருத்துவமனையின் கொரோனா வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர் அதே மாவட்டத்தைச் சேர்ந்த சந்தியா ராணி மொண்டோல் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மருத்துவமனை நிர்வாகம் 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
ஒரு படுக்கை மட்டும் எரிந்ததால் கொசுவர்த்தி சுருளால் தீ பரவியிருக்கலாம் என மூத்த மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் பொது வார்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் மூன்று நோயாளிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
இதுதொடர்பாக பர்த்வான் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளரும் துணை முதல்வருமான டாக்டர் தபாஸ் கோஷ் கூறுகையில், அதிகாலை 5 மணியளவில் வார்டில் தீ விபத்து ஏற்பட்டது. பொது வார்டில் நான்கு நோயாளிகள் இருந்தனர். மூன்று நோயாளிகளை நாங்கள் காப்பாற்றிய போதிலும், ஒருவர் உயிரிழந்தார். ஒரு படுக்கை மட்டுமே தீயினால் கடுமையாக பாதிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.