

மும்பை,
மராட்டிய மாநிலத்தில் கொரோனாவின் 3-ஆம் அலை உச்சத்தை கடந்து விட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர், மும்பை, தானே, ராய்காட், பால்கர் போன்ற நகரங்களில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால், மூன்றாவது அலையின் உச்சம் இப்போது முடிந்துவிட்டது என்று என்னால் கூற முடியும், அங்கு சமீபத்திய கொரோனா பாதிப்புகளின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. மராட்டியத்தில் நாசிக், நாக்பூர், புனே, அவுரங்காபாத் போன்ற நகரங்களில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஆனாலும் கவலைப்பட அவசியமில்லை, ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் எளிய சிகிச்சை மற்றும் மருந்துகளால் 5 முதல் 7 நாட்களில் குணமடைந்து விடுகின்றனர்.
மாநிலத்தில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துவருகிறது. முன்னதாக ஒருநாள் பாதிப்பு 47 ஆயிரம் வரை சென்றது. தற்போது அது 25 ஆயிரமாகக் குறைந்துள்ளது. மேலும், 92 முதல் 96 சதவிகிதம் படுக்கைகள் தற்போது காலியாக உள்ளன. ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான நோயாளிகளே ஆக்ஸிஜன் மற்றும் அவசரப்பிரிவு சிகிச்சையில் உள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்தார்.