

ரஷிய தடுப்பூசி
கொரோனாவுக்கு எதிராக ரஷியா உருவாக்கியுள்ள தடுப்பூசி, ஸ்புட்னிக் லைட். இது ஒற்றை டோஸ் தடுப்பூசி ஆகும். இந்த தடுப்பூசியை ரஷிய நேரடி முதலீட்டு நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து, இந்தியாவில் ஐதராபாத்தை சேர்ந்த ஹெட்டெரோ பயோபார்மா என்ற மருந்து நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த தடுப்பூசி, ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் மருந்து கலவையையே கொண்டுள்ளது. இந்த ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்தியாவின் அவசர பயன்பாட்டு ஒப்புதலை பெற்றுள்ளது. ஆனால் இந்தியாவில் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.
வேண்டுகோளின் பேரில் அனுமதி
இந்த நிலையில் இத்தடுப்பூசியின் அவசர பயன்பாட்டு ஒப்புதலை மத்திய அரசு வழங்குகிற வரையில், இதன் ஏற்றுமதியை அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ரஷிய தூதர் நிக்கோலே குடசேவ் வேண்டுகோள் விடுத்தார். இதைப்பரிசீலித்த மத்திய அரசு, 40 லட்சம் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகளை ரஷியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி அளித்துள்ளது என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
79.4 சதவீத செயல்திறன்
ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியைப் பொறுத்தமட்டில் இது உருமாறிய கொரோனா வைரஸ்கள் அனைத்துக்கும் எதிரான செயல்திறனை கொண்டிருக்கிறது என்பது ரஷியாவின் கமலேயா சென்டர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ரஷியாவில் இந்த தடுப்பூசியை கடந்த ஆண்டு டிசம்பர் 5-ந் தேதிக்கும், இந்த ஆண்டு ஏப்ரல் 15-ந் தேதிக்கும் இடையே தடுப்பூசி திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு செலுத்தி ஆய்வு செய்ததில், தடுப்பூசி செலுத்திய 28 நாட்களுக்கு பிறகு 79.4 சதவீத செயல்திறன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.