

லக்னோ,
உத்தரபிரதேசத்தின் புலந்த்சாஹர் மாவட்டத்துக்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் கடந்த 3-ந்தேதி பசு பாதுகாவலர்களால் வன்முறை நிகழ்ந்தது. இதில் வன்முறையை தடுக்க வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் மற்றும் ஒரு வாலிபர் என 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில், முக்கிய குற்றவாளியான மாவட்ட பஜ்ரங்தள ஒருங்கிணைப்பாளர் யோகேஷ் ராஜ் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். இந்த வன்முறை தொடர்பாக பல்வேறு விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஜிதேந்திர மாலிக் என்பவருக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜிதேந்திர மாலிக்கை, நேற்று போலீசாரிடம் ராணுவம் ஒப்படைத்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே புலந்த்சாஹரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த ரயீஸ் அக்தரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டது. புலந்த்சாஹர் சிறப்பு போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ண பகதூர் சிங் மற்றும் சில போலீசார் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.