துணை ஜனாதிபதியாக நாளை பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்


துணை ஜனாதிபதியாக நாளை பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்
x

கோப்புப்படம் 

துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆவார். இவர் தொடர்ந்து 2 முறை துணை ஜனாதிபதியாக இருந்துள்ளார். இவருக்கு பிறகு 14 துணை ஜனாதிபதி தேர்தல்கள் நடந்துள்ளன. 16-வது தேர்தலில் ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2 ஆண்டுகள் 324 நாட்கள் அதாவது ஏறக்குறைய 3 ஆண்டுகள் பதவி வகித்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி திடீரென பதவியை ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து அந்த பதவிக்கு செப்டம்பர் 9-ந் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்தது. துணை ஜனாதிபதி பதவிக்கு ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தங்களது வேட்பாளராக மராட்டிய மாநில கவர்னரான கோவையை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை அறிவித்தது.

எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி சார்பில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதியான ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பி.சுதர்சன் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

மொத்தமுள்ள 781 வாக்குகளில் 767 வாக்குகள் பதிவானது. இதில் 15 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். இதன் மூலம் சி.பி.ராதாகிருஷணன், இந்தியாவின் துணை ஜனாதிபதியானார்.

துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், சி.பிராதாகிருஷ்ணன் மராட்டிய கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார். குஜராத் மாநில கவர்னரான ஆச்சார்ய தேவ்ரத்துக்கு, மராட்டிய கவர்னர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை துணை ஜனாதிபதியாக பதவியேற்பார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி மாளிகையில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story