துணை ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்

துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்க உள்ளார்.
துணை ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்
Published on

புதுடெல்லி,

இந்தியாவின் 17-வது துணை ஜனாதிபதி தேர்தல் நேற்று முன்தினம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் 452 வாக்குகள் பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் பெற்ற வெற்றியை, தேர்தலை நடத்திய மாநிலங்களவை செயலாளர் பி.சி.மோடி இந்திய தேர்தல் கமிஷனுக்கும், இந்திய அரசின் சட்டத்துறைக்கும் கடந்த 9-ம் தேதி தெரிவித்திருந்தார்.

இன்று பதவியேற்பு

இதனைத்தொடர்ந்து துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான சான்றிதழை தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் தயார் செய்தது. இதில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர்சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த சான்றிதழின் நகலை துணை தேர்தல் கமிஷனர் பானு பிரகாஷ் யெதுரு மற்றும் செயலாளர் சுமன்குமார் தாஸ் ஆகியோர் உள்துறை செயலாளர் கோவிந்த் மோகனிடம் வழங்கினர். இதில் உள்ள தகவல்கள் சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவியேற்கும் விழாவில் வாசிக்கப்படும் என தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் துணை ஜனாதிபதி பதவியேற்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இதற்கான விழா காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் பங்கேற்கிறார்கள்.

துணை ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். துணை ஜனாதிபதிக்கு சம்பளம் என்று எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் மாநிலங்களவை தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கு மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் கிடைக்கும். இது தவிர உறைவிடம், மருத்துவம், பயணம் உள்பட பல சலுகைகள் உள்ளன. ஓய்வுக்குப் பிறகு சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக கிடைக்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com