

சி.பி.யோகேஷ்வர்
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு கவிழ்ந்து பா.ஜனதா அரசு அமைய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் சி.பி.யோகேஷ்வர். இவர், பா.ஜனதா ஆட்சியில் முதல்-மந்திரியாக எடியூரப்பா இருந்த போது சுற்றுலாத்துறை மந்திரியாக இருந்தார். பின்னர் பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பின்பு யோகேஷ்வருக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை.
இதன் காரணமாக பா.ஜனதா தலைவர்கள் மீது சி.பி.யோகேஷ்வர் அதிருப்தி அடைந்திருப்பதாக தெரிகிறது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை பலமுறை சந்தித்து மந்திரி பதவி வழங்கும்படி சி.பி.யோகேஷ்வர் வலியுறுத்தினார். ஆனால் அவருக்கு இதுவரை மந்திரி பதவி கிடைக்கவில்லை.
காங்கிரசில் சேர முடிவு
எனவே பா.ஜனதாவில் இருந்து விலக சி.பி. யோகேஷ்வர் முடிவு செய்திருப்பதாகவும், அவர் காங்கிரசில் சேர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து ராமநகரில் மந்திரி அஸ்வத் நாராயணிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
உண்மை இல்லை
கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு அமைய காரணமானவர்களில் முன்னாள் மந்திரி சி.பி.யோகேஷ்வரின் பங்கு மிகப்பெரியது. அவர் பா.ஜனதாவில் இருந்து விலக இருப்பதாக வரும் தகவல்களில் உண்மை இல்லை. அவர் காங்கிரஸ் கட்சியில் சேர மாட்டார். பா.ஜனதாவிலேயே தொடர்ந்து இருப்பார். பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை இழுக்க காங்கிரஸ் தலைவர்கள் முயற்சிக்கின்றனர். அவர்களது முயற்சி வெற்றி பெறாது.
வருகிற 2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் ராமநகர் மாவட்டம் சென்னபட்டணா தொகுதியிலேயே பா.ஜனதா சார்பில் சி.பி.யோகேஷ்வர் போட்டியிடுவார். அது உறுதியானதாகும். சி.பி.யோகேஷ்வருக்கு ஏதேனும் அதிருப்தி இருந்தால், அதனை பா.ஜனதா தலைவர்கள் சரி செய்வார்கள். பா.ஜனதாவில் இருந்து அவர் விலகும் பேச்சுக்கே இடமில்லை.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.