

புதுடெல்லி
கடந்தாண்டில் (2016-17) ரூ. 81,683 கோடியை பொதுத்துறை வங்கிகள் வராக்கடன்களாக கருதி தள்ளுபடி செய்துவிட்டன என்று ஊடகங்களில் வந்துள்ள செய்தியை சுட்டிக்காட்டி மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பினார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கேரளாவில் தனது ஓய்வினை முடித்திருந்தால் இது குறித்து பதில் அளிக்கும்படி கேலியாக தனது டிவிட்டர் பதில் குறிப்பிட்ட யெச்சூரி இக்கடன்களை பெற்றுள்ள பெரு நிறுவனங்களின் பெயர்களை அரசு மறைத்து வைப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
ஒருபுறம் விவசாயிகள் தற்கொலை செய்து வரும் நிலையில் மற்றொருபுறம் இப்படி கடன் தள்ளுபடி நிகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார். பாஜகவின் ஆட்சியில் முதல் இரண்டு வருடங்களில் ரூ. 1.14 லட்சம் கோடியை தள்ளுபடி செய்துள்ளது. மூன்றாவது ஆண்டில் ரூ. 81,683 கோடியை தள்ளுபடி செய்துள்ளது பாஜக அரசு. இதன் மூலம் யார் பலன் பெறுகிறார்கள் என்பது தெளிவாக தெரிந்த செய்திதான் என்றும் அவர் கூறினார். ஓராண்டில் சுமார் 41 சதவீதம் அளவிற்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன.
கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அருண் ஜெட்லி மார்க்சிஸ்ட் கட்சியினர் பாஜக, ஆர் எஸ் எஸ் தொண்டர்களை கொல்வது மூலம் அச்சமுள்ள சூழலை உருவாக்குகிறது என்று கடுமையாக தாக்கிப் பேசியிருந்தார். இதற்கு பதிலடியாக மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் நிதி அமைச்சரை கடன் தள்ளுபடி விவகாரத்தில் கேள்வி கேட்டுள்ளார்.