

திருவனந்தபுரம்,
சி.எம்.ஆர்.எல். நிறுவன ஊழல் வழக்கு தொடர்பாக, கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி பினராயி விஜயனின் வீடு உள்பட, கேரளாவில் உள்ள 10 இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சி.எம்.ஆர்.எல். நிர்வாக இயக்குநர் சசிதரன் கர்த்தாவின் இல்லத்திலும், கோழிக்கோட்டில் உள்ள முன்னாள் மந்திரி முகமது ரியாஸின் இல்லத்திலும் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில், பினராயி விஜயன் வீட்டில் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்(சி.பி.எம்.) கட்சி தொண்டர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பினராயி விஜயன் வீட்டின் முன்பு திரண்ட கட்சி தொண்டர்கள், அமலாக்கத்துறையினரின் வாகனத்தை அடித்து நொறுக்கினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு டெல்லி முன்னாள் முதல்-மந்திரி கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “கேரள முன்னாள் முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு எதிரான அமலாக்கத்துறையின் சோதனையானது, பிராந்திய எதிர்க்கட்சிகளை குறிவைக்கவும், ஜனநாயகத்தை சீர்குலைக்கவும் பா.ஜ.க.வால் மத்திய அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன” என்று பதிவிட்டுள்ளார்.
அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பினராயி விஜயன், “நீண்ட காலமாக அமலாக்கத்துறை என் வீட்டில் சோதனை நடத்த விரும்பியது. இந்தச் சோதனை சிலருக்கு, குறிப்பாக ராகுல் காந்தி போன்றவர்களுக்கு, பெரும் திருப்தியை அளிக்கும் என்று நான் உணர்கிறேன்.
பினராயி விஜயனின் வீட்டில் ஏன் சோதனை நடத்தப்படவில்லை? ஏன் அவர் கைது செய்யப்படவில்லை? என்பதே ராகுல் காந்தி எழுப்பிய கேள்வி. பா.ஜ.க. அரசு நாட்டில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது எப்போதும் திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு எதிராக நாடு முழுவதும் வலுவான போராட்டங்கள் எழுந்துள்ளன.
இவை எதுவும் எங்களை அழித்துவிடப் போவதில்லை. இதை நாங்கள் ஒரு தொடக்கமாக மட்டுமே பார்க்கிறோம். இதுபோன்ற நடவடிக்கைகள் எங்களை முற்றிலுமாக அழித்துவிடும் என்று யாரும் நினைக்கக் கூடாது. உள்ளூர் மக்கள் மற்றும் கட்சித் தோழர்களின் உணர்வுகள் இங்கே வெளிப்படுத்தப்பட்டன.
எதிரிகள் என்னைத் தாக்கத் தயாரான போதெல்லாம், கட்சியின் வலுவான ஆதரவுதான் எனக்குக் கிடைத்தது. அந்த ஆதரவில் எந்தக் குறைவும் இல்லை என்பதைத்தான் தோழர்கள் இன்று நிரூபித்துள்ளனர். இதுதான் நமது பலம். எதையும் எதிர்கொள்ள நாம் ஒன்றிணைவோம்” என்று தெரிவித்தார்.