உத்ரகாண்ட்: டேராடூன் சென்ற ஹெலிகாப்டர் விபத்து

மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மலையில் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகி உள்ளது.
உத்ரகாண்ட்: டேராடூன் சென்ற ஹெலிகாப்டர் விபத்து
Published on: 

டேராடூன்,

பத்ரிநாத்தில் இருந்து டேராடூன் நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர் ஜோஷிமத் அருகே விபத்தில் சிக்கியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத்தில் இருந்து டேராடூன் நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று ஜோஷிமத் அருகே விபத்தில் சிக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

6 பேர் பயணம் செய்த அந்த ஹெலிகாப்டர், ஜோஷிமத் அருகே உள்ள சாயென் (Chaien) கிராமப் பகுதியில் விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹெலிகாப்டர் திடீரென காணாமல் போனதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தேடுதல் பணியைத் தொடங்கியது. வான்வழித் தேடுதல் குழுக்களும் களமிறக்கப்பட்டன.

தேடுதல் நடவடிக்கையின்போது சாயென் கிராமப் பகுதியில் இருந்து புகை எழுவது வான்வழிக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்ற தகவல் பரவியது.

விபத்துக்குள்ளானதாகக் கூறப்படும் ஹெலிகாப்டர், டிரான்ஸ் பாரத் ஏவியேஷன் (Trans Bharat Aviation) நிறுவனத்திற்குச் சொந்தமானது. VT-HCX என்ற பதிவு எண்ணைக் கொண்ட அந்த ஹெலிகாப்டர், இன்று பிற்பகல் 1.14 மணிக்கு பத்ரிநாத்தில் இருந்து புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஹெலிகாப்டரில் மொத்தம் 6 பேர் இருந்ததாக சாமோலி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களில் 5 பேர் பயணிகள்; ஒருவர் விமானி ஆவார்.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மாவட்ட நிர்வாகம், பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் (SDRF) இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்,

, ஜோஷிமத் அருகே உள்ள சாயென் கிராமப் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதாகத் தமக்கு துயரமான தகவல் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாவட்ட நிர்வாகம், பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் SDRF இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், சம்பவம் முழுவதையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

படுகாயமடைந்தவர்கள் இருந்தால், அவர்களை மேல் சிகிச்சைக்காக உடனடியாக உயர்நிலை மருத்துவமனைகளுக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

ஹெலிகாப்டர் விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகவில்லை. விபத்தில் பயணித்த ஆறு பேரின் நிலை குறித்த முழுமையான விவரங்களும் உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விபத்து தொடர்பான கூடுதல் தகவல்களை மாவட்ட நிர்வாகமும் மீட்புக் குழுவினரும் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மலையில் நொறுங்கி விழுந்து விபத்துகுள்ளானதாகதகவல்கள் தெரிவிக்கின்றன.

X