மிகப்பெரும் விழிப்புணர்வு பிரசாரங்கள் மூலம் சைக்கிள் ஓட்டும் கலாசாரத்தை ஊக்குவிக்க வேண்டும் - வெங்கையா நாயுடு அறிவுறுத்தல்

மிகப்பெரும் விழிப்புணர்வு பிரசாரங்கள் மூலம் சைக்கிள் ஓட்டும் கலாசாரத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
மிகப்பெரும் விழிப்புணர்வு பிரசாரங்கள் மூலம் சைக்கிள் ஓட்டும் கலாசாரத்தை ஊக்குவிக்க வேண்டும் - வெங்கையா நாயுடு அறிவுறுத்தல்
Published on

புதுடெல்லி,

கொரோனாவுக்கு பிந்தைய உலகில் சைக்கிள் ஓட்டுதல் என்ற தலைப்பில் சர்வதேச ஆன்லைன் கருத்தரங்கு ஒன்று நேற்று நடந்தது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மெய்நிகர் முறையில் முக்கிய உரை நிகழ்த்தினார்.

அதில் உடல் ஆரோக்கியத்திற்கும், சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கும் ஏற்ற சைக்கிள் சவாரியை ஊக்குவிக்க, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கொரோனா தொற்று நமது வாழ்கை முறை, வாங்கும் திறன், நேரத்தை பயன்படுத்துதல், பயணம் போன்றவற்றை மாற்றியிருக்கிறது. அதேநேரம் நகர்ப்புற பயண திட்டத்தில் சைக்கிள் ஓட்டுவதை ஒருங்கிணைப்பதற்கான ஒரு அரிதான வாய்ப்பையும் வழங்கி இருக்கிறது.

எனவே மிகப்பெரும் விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் தொடர் நிகழ்வுகள் மூலம் சைக்கிள் ஓட்டும் கலாசாரத்தை ஊக்குவிக்க வேண்டும். இதை மிகப்பெரும் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டிய தேவை உள்ளது.

சைக்கிள் ஓட்டுவதால் உடலுக்கு ஆரோக்கியம் ஏற்படுவதுடன், இது ஒரு மலிவான உடற்பயிற்சியாகவும், மாசு இல்லா பயண அமைப்பாகவும் விளங்குகிறது. கிராமம் மற்றும் நகர்ப்புற ஏழைகளின் அடிப்படை நகர்வுக்கு சைக்கிள்கள் மிகப்பெரிய உதவியை அளிக்கின்றன.

எனவே நகர்ப்புறங்களில் சைக்கிள் ஓட்டுவதற்காக தனியான பாதையை உருவாக்குவதை நகர்ப்புற திட்ட வடிவமைப்பாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மனதில் கொள்ள வேண்டும். அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், சைக்கிள் போக்குவரத்து அதிகரித்துள்ளது. நம் நாட்டிலும் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்று வெங்கையா நாயுடு கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com