கிரெடிட் கார்டு மோகத்தால் இளைஞர்களிடம் அதிகரிக்கும் கடன் சுமை!

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் கிரெடிட் கார்டு பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது.
கிரெடிட் கார்டு
Published on: 

புதுடெல்லி,

இந்தியாவில் புதிதாக கிரெடிட் கார்டு பெறுவோரில் 50 சதவீதம் பேர் 30 வயது அல்லது அதற்கும் குறைவானவர்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

கிரெடிட் கார்டு

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் கிரெடிட் கார்டு பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தநிலையில், புதிதாக கிரெடிட் கார்டு பெறுவோரில் 50 சதவீதம் பேர் 30 வயது அல்லது அதற்கும் குறைவானவர்கள் என்று டிரான்ஸ்யூனியன் சிபில் நிறுவனம் வெளியிட்டுள்ள 'பியாண்ட் தி ஸ்வைப் 2026 என்ற ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாத நிலவரப்படி, இந்தியாவில் புதிதாக கிரெடிட் கார்டு பெறுவோரில் 46 சதவீதம் பேர் சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 1.4 கோடியாக இருந்த கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை, 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 5.2 கோடியாக உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில், கிரெடிட் கார்டுகள் மூலம் நிலுவையில் உள்ள கடன் தொகை ரூ.40 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.3.1 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது 8.3 மடங்கு உயர்வாகும். செயல்பாட்டில் உள்ள கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கையும் 2.1 கோடியில் இருந்து 10.7 கோடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிரெடிட் கார்டு வைத்திருப்பவரின் சராசரி நிலுவைக் கடன் தொகை ரூ.31 ஆயிரத்தில் இருந்து ரூ.65 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடன் வசதி பெறுவோரில் 25 சதவீதம் பேர் மட்டுமே கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துகின்றனர். இதுவே இங்கிலாந்தில் 70 சதவீதமாகவும், கொலம்பியாவில் 62 சதவீதமாகவும், ஹாங்காங்கில் 98 சதவீதமாகவும் உள்ளது. கிரெடிட் கார்டு பெறுவதற்கு முன்பே இளைஞர்கள் பல்வேறு வகையான கடன்களைப் பெற்றிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 2024-ம் ஆண்டில் முதல் முறையாக கிரெடிட் கார்டு பெற்ற 24 முதல் 30 வயதுக்குட்பட்ட இளம் தலைமுறையினரில் 31 சதவீதம் பேர் ஏற்கனவே குறைந்தது 2 கடன் கணக்குகளை வைத்திருந்தனர்.

கடன் வசதி

இவர்களில் 30 சதவீதம் பேர் மட்டுமே இதற்கு முன்பு எந்தக் கடனும் பெறாதவர்கள். இதுவே 2018-ம் ஆண்டில் இதே வயதுப் பிரிவைச் சேர்ந்த மில்லினியல் தலைமுறையினரில், முதல் கிரெடிட் கார்டு பெறுவதற்கு முன்பு கடன் அனுபவம் இல்லாதவர்கள் 56 சதவீதமாக இருந்தனர். மேலும், புதிதாக கிரெடிட் கார்டு பெற்ற இளம் தலைமுறையினரில் 18 சதவீதம் பேர் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கான கடனையும், 23 சதவீதம் பேர் சிறிய தொகையிலான தனிநபர் கடனையும் ஏற்கனவே பெற்றிருந்தனர். இதன் மூலம், இளைஞர்களுக்குக் கிரெடிட் கார்டு என்பது முதல் கடன் வாய்ப்பாக மட்டுமின்றி, ஏற்கனவே பெற்றுள்ள கடன்களுடன் கூடுதலாகச் சேரும் மற்றொரு கடன் வசதியாகவும் மாறி வருவது தெரியவந்துள்ளது.

முதல் கிரெடிட் கார்டைப் பெற்ற 3 மாதங்களுக்குள், இளம் தலைமுறையினரில் 28 சதவீதம் பேர் ரூ.25 ஆயிரத்துக்கும் அதிகமான கடன் நிலுவையை வைத்திருந்தனர். 2018-ம் ஆண்டில் கிரெடிட் கார்டு பெற்ற அதே வயது பிரிவைச் சேர்ந்த மில்லினியல் தலைமுறையினரில் இந்த விகிதம் 20 சதவீதமாக இருந்தது. மேலும், முதல் கிரெடிட் கார்டைப் பெற்ற 12 மாதங்களுக்குள், இளம் தலைமுறையினரில் 69 சதவீதம் பேர் மற்றொரு கடன் வசதியையும் பெற்றுள்ளனர். முந்தைய தலைமுறையினரில் இந்த விகிதம் 55 சதவீதமாக இருந்தது. கூடுதலாகக் கடன் பெற்ற இளம் தலைமுறையினரில் 39 சதவீதம் பேர், தங்களுக்குக் கிரெடிட் கார்டு வழங்கிய அதே நிறுவனத்திடமிருந்து மற்றொரு கடனையும் பெற்றுள்ளனர். முந்தைய தலை முறையினரில் இந்த விகிதம் 33 சதவீதமாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில், கிரெடிட் கார்டுகளை மட்டுமே வைத்திருப்பவர்களின் விகிதம் 50 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில், கிரெடிட் கார்டுகளுடன் பிற நுகர்வோர் கடன்களையும் பெற்றிருப்பவர்களின் விகிதம் 16 சதவீதத்தில் இருந்து 32 சதவீதமாக உயர்ந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com