‘பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன’ - தேஜஸ்வி யாதவ்

பா.ஜ.க. அரசின் பாதுகாப்புடன் குற்றவாளிகள் அச்சமின்றி செயல்படுவதாக தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
‘பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன’ - தேஜஸ்வி யாதவ்
Published on

பாட்னா,

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அந்த மையத்தின் 4-வது மாடியில் கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் கொலையா? அல்லது தற்கொலையா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் சில அரசியல் கட்சியினர் நடத்த போராட்டங்கள் காரணமாக இந்த விவகாரம் பீகாரில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. பீகாரில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இது குறித்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் ராப்ரி தேவி கூறுகையில், “பீகாரின் பல்வேறு மாவட்டங்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்கள். நிதிஷ் குமார் தலைமையிலான மாநில அரசு இதற்கு பதில் சொல்ல வேண்டும். இதுதான் ராம ராஜ்ஜியமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், பா.ஜ.க. அரசின் பாதுகாப்புடன் குற்றவாளிகள் அச்சமின்றி செயல்படுவதாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

“குற்றங்கள் உச்சத்தை எட்டியுள்ளன. பா.ஜ.க. அரசின் பாதுகாப்புடன் குற்றவாளிகள் அச்சமின்றி செயல்படுவதால் குற்றங்கள் அதிகரித்துவிட்டன. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததில் இருந்து குற்றவாளிகள் ஆட்சியாளர்களைப் போல் மாறிவிட்டார்கள். முதல்-மந்திரி நிதிஷ் குமார் சுயநினைவில் இல்லை.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன. பீகாரில் குற்றவாளிகளை அரசு பாதுகாக்கிறது. குற்றங்கள் நடக்கும்போது கண்டனம் தெரிவிப்பது எதிர்க்கட்சிகளின் வேலை. அரசாங்கம் அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் பீகாரில் ஆளும் அரசுக்கு எதிர்க்கட்சிகளை குறை சொல்லவே நேரம் போதவில்லை. இவர்கள் எந்த பிரச்சினைக்கும் பதில் சொல்வதும் இல்லை, நடவடிக்கை எடுப்பதும் இல்லை.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com