ஆர்.சி.பி. அணி மீது கிரிமினல் வழக்கு; கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்


ஆர்.சி.பி. அணி மீது கிரிமினல் வழக்கு; கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்
x

கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நேற்று பெங்களூரு விதானசவுதாவில் நடைபெற்றது

பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி (ஆர்.சி.பி.) முதல்முறையாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.இதையடுத்து அந்த அணி வீரர்களுக்கு கடந்த மாதம் (ஜூன்) 4-ந் தேதி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 போ் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சி.ஐ.டி. போலீசார் மற்றும் மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கும் கர்நாடக அரசு உத்தரவிட்டது. அத்துடன் ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி மைக்கேல் டி. குன்கா தலைமையில் ஒருநபர் நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.நீதிபதி குன்கா கர்நாடக அரசிடம் அறிக்கை வழங்கினார். அதில் கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. நிர்வாகம், கிரிக்கெட் சங்கம், ஆகியவை காரணம் என்றும், போலீசார் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என்றும் அதில் கூறப்பட்டது. மேலும் ஆர்.சி.பி. அணி மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யவும் அதில் கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நேற்று பெங்களூரு விதானசவுதாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான விவகாரம் குறித்து நீதிபதி குன்கா விசாரணை ஆணையம் அளித்துள்ள அறிக்கை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்களை ஏற்பது என்று ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.

இந்த முடிவு குறித்து சட்டத்துறை மந்திரி எச்.கே.பட்டீல் நிருபர்களிடம் பேசினார். அப்போது, எச்.கே.பட்டீலிடம் நிருபர்கள், ஆர்.சி.பி. அணி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்வது சட்ட நடவடிக்கையில் உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.அதற்கு அவர் பதில் அளிக்கையில், சட்ட நடவடிக்கையில் சிவில் மற்றும் குற்ற வழக்குகள் ஆகிய 2 வழக்குகளும் அடங்கும் என்றார்.

இதனால் ஆர்.சி.பி. அணி நிர்வாகம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம், போலீசார் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

1 More update

Next Story