12 முதல்-மந்திரிகள் மீது குற்ற வழக்குகள் - ஆய்வில் தகவல்

12 முதல்-மந்திரிகள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
புதுடெல்லி,
குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் அடைக்கப்படும் பிரதமர், முதல்-மந்திரிகள் மற்றும் மந்திரிகளை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசு மசோதா கொண்டு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்திய முதல்-மந்திரிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்து ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு ஆய்வு செய்துள்ளது.
இதில் மொத்தமுள்ள 30 முதல்-மந்திரிகளில் 12 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி மீது 89 வழக்குகளும், அடுத்ததாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது 47 வழக்குகளும் உள்ளன. சந்திரபாபு நாயுடு (ஆந்திரா) மீது 18, சித்தராமையா (கர்நாடகா) மீது 13, ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட்) மீது 5 வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
மராட்டியம் மற்றும் இமாசல பிரதேச முதல்-மந்திரிகள் தலா 4 வழக்குகளையும், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் 2 வழக்குகளையும், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மன் ஒரு வழக்கையும் பெற்றுள்ளனர். 10 முதல்-மந்திரிகள் மீது கொலை முயற்சி, ஆள்கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.






