'வெளியுறவுத்துறை செயலாளர் மீதான விமர்சனங்கள் அபத்தமானது' - சசி தரூர்

விக்ரம் மிஸ்ரி மிகச்சிறந்த பணியை செய்துள்ளார் என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.
'வெளியுறவுத்துறை செயலாளர் மீதான விமர்சனங்கள் அபத்தமானது' - சசி தரூர்
Published on

புதுடெல்லி,

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்தது.

இதைத் தொடர்ந்து கடந்த 10-ந்தேதி, தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் தாக்குதல் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இதை இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் உறுதி செய்தன.

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் கடந்த 7-ந்தேதி தொடங்கிய நிலையில், 'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பான விவரங்களை வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, செய்தியாளர் சந்திப்புகளில் தொடர்ச்சியாக விளக்கி வந்தார். அந்த வகையில், தாக்குதல் நிறுத்தம் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே உடன்பாடு எட்டப்பட்டதாக கடந்த சனிக்கிழமை ஊடகங்களிடம் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

இதையடுத்து, சமூக ஊடகங்களில் பலரும் விகரம் மிஸ்ரியை குறிவைத்து கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். அது மட்டுமின்றி, லண்டனில் பணிபுரிந்து வரும் விக்ரம் மிஸ்ரியின் மகள் குறித்தும் சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து பதிவிட்டனர். இதைத் தொடர்ந்து விக்ரம் மிஸ்ரி தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தை தனிப்பட்ட கணக்காக(Protected) மாற்றினார்.

இந்த நிலையில், விக்ரம் மிஸ்ரி மீதான விமர்சனங்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி மீதான விமர்சனங்கள் அபத்தமானது என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

"விக்ரம் மிஸ்ரி மிகச்சிறந்த பணியை செய்துள்ளார். அவர் மிகவும் கடினமாக உழைத்துள்ளார். இரண்டு பெண் அதிகாரிகளுடன் (விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் கர்னல் சோபியா குரேஷி) ஆகியோருடன் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல் தொடர்பாக மிக அமைதியாகவும், தொழில் நேர்த்தியுடனும் ஊடகங்களிடம் விளக்கமளித்தார். அவரை ஏன் விமர்சனம் செய்ய வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை. அவர் மீதான விமர்சனங்கள் அபத்தமானது." என்று தெரிவித்தார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக இந்திய ஆட்சிப் பணி(ஐ.ஏ.எஸ்.) சங்கம் வெளியிட்ட அறிக்கையில், "ஐ.ஏ.எஸ். சங்கம் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் அவரது குடும்பத்தினருடன் ஒற்றுமையாக நிற்கிறது. நேர்மையுடன் தங்கள் கடமைகளை செய்யும் அரசு ஊழியர்கள் மீது தேவையற்ற தனிப்பட்ட தாக்குதல்கள் மிகவும் வருந்தத்தக்கவை." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com