

புதுடெல்லி,
டெல்லியில் கடந்த 8-ந் தேதி 'இந்தியா' கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ராகுல்காந்தி, "அரசியல் காரணங்களுக்காக கேரள முன்னாள் முதல்-மந்திரி பினராயி விஜயனை தன்னால் கட்டி தழுவ முடியாது" என தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "யார் யாரை தழுவுகிறார்கள் என்பது குறித்து எனக்கு கவலை இல்லை. ஆனால் ராகுல்காந்தி பிரதமர் மோடியை தழுவும் புகைப்படத்தை நாம் அனைவரும் பார்த்தோம். மோடியை தழுவிய செயலில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
மாறாக, அவரது கருத்துகள் ஒரு குறிப்பிட்ட அரசியல் செய்தியை வெளிப்படுத்துகின்றன. நாங்கள் மட்டுமல்ல அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் போன்ற தலைவர்களும், காங்கிரஸ் அல்லாத பிற முக்கிய கட்சிகளும்கூட கூட்டத்தின்போது காங்கிரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக பேசினார்கள். தற்போதைய சூழல் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையும், குறிப்பாக ராகுல்காந்தியின் அணுகுமுறையும் பா.ஜனதாவின் நலன்களுக்கு சாதகமாக உள்ளது” என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:- ராகுல்காந்தி மீதான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாக்குதல் அதன் அரசியல் பாதுகாப்பற்ற தன்மையையும், சமீபத்திய தோல்விகளுக்கான காரணங்களை மதிப்பிடுவதில் உள்ள இயலாமையையும் பிரதிபலிப்பதாக உள்ளது.
கேரளாவில் மோசமான தேர்தல் செயல்பாட்டுக்கான காரணங்களை ஆராய்வதற்கு பதிலாக ராகுல் காந்தியை குறிவைக்க மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு முயற்சிக்கிறது. இதே பாதையில் அது தொடர்ந்தால், அக்கட்சிக்கு இன்னும் பெரிய தோல்விகளே காத்திருக்கும்.
தங்கள் சொந்த அரசியல் சரிவுக்காக ராகுல் காந்தியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாக்குகிறது. கேரளாவுக்கு வெளியே அக்கட்சியின் சில தலைவர்கள் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெற்றனர் என்ற உண்மையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மறந்து விடுகிறது.
பா.ஜனதாவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் ராகுல்காந்தி முன்னணியில் இருந்து வருகிறார். அவரே அரசியல் ரீதியாக குறிவைக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஆளாகியுள்ளார். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.