சத்தீஷ்கார்: சி.ஆர்.பி.எப். சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை; 8 ஆண்டுகளில் 200-வது சம்பவம்

சத்தீஷ்காரில் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் தற்கொலை செய்வது அதிகரித்து காணப்படுகிறது.
சத்தீஷ்கார்:  சி.ஆர்.பி.எப். சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை; 8 ஆண்டுகளில் 200-வது சம்பவம்
Published on: 

பிஜாப்பூர்

சத்தீஷ்காரில் பணியின்போது, சி.ஆர்.பி.எப். சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சத்தீஷ்காரில் மாவோயிஸ்டுகளின் பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபட்டு விட்டது என்று கடந்த மார்ச் மாதம் அரசால் அறிவிக்கப்பட்டது. எனினும், மாவோயிஸ்டு ஒழிப்பு நடவடிக்கைக்காக அதிக அளவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சி.ஆர்.பி.எப்.) குவிக்கப்பட்டு உள்ளனர்.

உதவி ஆய்வாளர்

இந்த நிலையில், பிஜாப்பூர் மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) முகாம் இயங்கி வருகிறது. மெட்டாகுடம் காட்டுப்பகுதியில் உள்ள இந்த முகாமில் 131-வது பட்டாலியனை சேர்ந்த தேவானந்த் யாதவ் பணியில் இருந்தார்.

உதவி ஆய்வாளர் அந்தஸ்தில் பணியாற்றிய இவர் கடந்த செவ்வாய் கிழமை நள்ளிரவில் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். இதில் படுகாயமடைந்து, சரிந்த நிலையில், சத்தம் கேட்டு சக வீரர்கள் ஓடி வந்தனர்.

8 ஆண்டுகள்

துப்பாக்கி குண்டு காயத்துடன் கிடந்த அவரை மீட்டு சுக்மா மாவட்டத்தில் உள்ள மற்றொரு முகாமுக்கு அனுப்பி வைத்தனர். எனினும், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்து விட்டார். உத்தரபிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தின் கர்ஜஹா கிராம பகுதியை சேர்ந்தவரான இவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

சத்தீஷ்காரில் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் தற்கொலை செய்வது அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 8 ஆண்டுகளில் இது 200-வது சம்பவம் ஆகும். குடும்பம் மற்றும் தனிப்பட்ட காரணங்கள், மதுவுக்கு அடிமையாதல், சுகாதாரம் தொடர்பான பாதிப்புகள் போன்றவை தற்கொலைக்கான காரணங்களாக கூறப்படுகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com